உத்தேச மின்வாசிப்பு பட்டியல் தொடர்பில் அங்கஜன் நடவடிக்கை!

இலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மின்வாசிப்பு பட்டியல் கட்டணத்தை பொதுமக்கள் செலுத்த தேவையில்லை என முன்னாள் விவசாய பிரதியமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலப்பகுதியில் மின்வாசிப்பு கட்டணத்திற்காக இலங்கை மின்சார சபை கடந்தகால பட்டியல் தொகையை அடிப்படையாக வைத்து உத்தேச மின்பற்றுச் சீட்டை பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளதாகவும், குறித்த நடைமுறை மூலம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியதோடு அதனை முழுமையாகச் செலுத்த இயலாத நிலையை பலர் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அங்கஜன் இராமநாதனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் அவர் தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை மின்சார சபையினால் ஒரே தடவையில் வழங்கும் மின் பட்டியலை நிறுத்துமாறும் மின் வாசிப்பு கட்டணம் தொடர்பில் பாவனையாளர்களின் வீடுகளுக்கு சென்று அந்தந்த மாதத்திற்கு மின் வாசிப்பு அலகுகளை கணக்கிடுமாறும் அமைச்சரிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து மக்களின் குறித்த பிரச்சினை தொடர்பில் தானும் அறிந்துள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க உத்தேச மின் வாசிப்புப் பட்டியலை நிறுத்துமாறு இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருப்பதாகவும்  அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அத்துடன், செலுத்தப்படாத மாதங்களுக்கான மின்பட்டியல் கொடுப்பனவுகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்துரையாடி மானியம் மற்றும் கால அவகாசத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் அமரவீரவிடம் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்