தமிழ் மக்கள் நடுத்தெருவில் நிற்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் எடுத்த முடிவே காரணம்- சி.வி.

தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் நிற்பதற்குக் காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஒருசிலர் தாம் நினைத்தபடி, முடிவுகளை எந்த விதமான ஆராய்வுகளும் இன்றி எடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தி வந்ததுதான் என தமிழ் மக்கள் கூட்டணியின் இணைத்தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மல்லாகம், குழமங்காலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்ட்ததின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உலகின் ஆதிக்குடிகளில் ஒன்றான எமது இனத்தின் பிரச்சினை தொடர்பாக எவ்வாறு ஓரிரு நபர்கள் தாம் நினைத்தபடி முடிவுகளை எடுக்க முடியும்? இது எத்தனை ஆபத்தானது? ஆகவே, கூட்டமைப்பு செயற்பட்டது போல தமிழ் மக்களின் எதிர்காலத்தை தனி ஒருவர் தீர்மானிக்கும் வகையில் நாம் செயற்படமாட்டோம்.

உலகம் பூராகவும் பரந்துவாழும் எமது மக்கள் மத்தியில் பல மேதைகளும் அறிஞர்களும் இருக்கின்றார்கள். அவர்களை எல்லாம் உள்வாங்கி நாம் கூட்டாகச் செயற்படுவோம். எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான உலகளாவிய சிந்தனைக் கூடம் ஒன்றையும் அரசியல் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடுகளுக்காக ஆய்வு நிறுவனங்கள், அபிவிருத்தி நிதியங்களை உருவாக்குவதற்கும் நாம் நடவடிக்கை எடுப்போம்.

நன்கு ஆராயப்பட்ட உத்திகளின் அடிப்படையிலேயே நாம் செயற்படவேண்டும். நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே எமக்கு இனி விடிவைக் கொண்டுவரும். யூதர்களின் நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளே அவர்களின் இன்றைய மேன்மை நிலைக்குக் காரணம். உலகம் முழுவதும் பணத்துடன் அறிவையும் அவர்கள் மூலதனம் இட்டதுதான் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது. நாமும் இஸ்ரேலியர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர். எம்மாலும் முடியும் என்பதை நாம் உணரவேண்டும்.

அதேவேளை, எமது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளை பெறுவதற்காக நாடாளுமன்ற அரசியலை காத்திரமான முறையில் நாம் மேற்கொள்வோம். ஆட்சியில் எந்த அரசாங்கம் இருந்தாலும் எமது மக்களின் நலன்களை கவனத்திற்கொள்ளாமல் அவற்றுக்கு நாம் ஒருபோதும் முண்டுகொடுக்க மாட்டோம். சந்தர்ப்பங்கள் கிடைத்தால் எமது மக்களின் நலன்களை முன்வைத்து நாம் பேரப் பேச்சுக்களில் ஈடுபடுவோம்.

எமது நாடாளுமன்றப் பிரவேசம் மூலம் எடுக்கக்கூடிய அத்தனை வளங்களையும் உரிய முறையில் பயன்படுத்தி எமது மக்களை வலுவூட்டச் செய்யும் பொருளாதார நடவடிக்கைகளை நாம் சுயநலம் இன்றி மேற்கொள்வோம். அதேவேளை, எவ்வாறு எமது மக்களின் தற்சார்பு பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்பது பற்றி சிந்தித்து வருகின்றோம். இதற்கு எவ்வாறு வெளிநாடுகளையும் புலம்பெயர் தமிழ் மக்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற உத்திகளை ஆராய்ந்து வருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.