அரச சொத்துக்களை ராஜபக்ஷ பிரசாரத்திற்காக முறைக்கேடாக பயன்படுத்துகின்றார் – திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு

பொதுத் தேர்தல் வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷ தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தி வருகின்றார் என திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், தேர்தல்கள் ஆணைக்குழு மஹிந்த ராஜபக்ஷ தொடர்பாக கவனம் செலுத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டவிதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்ற வேண்டும் என்கின்ற நிலையில் ஆளும் தரப்பினருக்கு ஒருவகையிலும் எதிர் தரப்பினருக்கு இன்னொருவகையிலும் சட்டம் செயற்பட்டால் ஆணைக்குழுவின் சுயாதீன தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் தேர்தல் சட்டவிதிகள் வழமையை விடவும் அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க அனைவரும் வரையறுக்கப்பட்ட பிரசார நடவடிக்கைகளிலேயே ஈடுப்பட முடியும் என்பதனால் எதிர்தரப்பு உறுப்பினர்கள் பெரிதும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்