10 மில்லியன் அமெரிக்க டொலர் பெற்ற குற்றச்சாட்டு – ஐக்கிய தேசியக் கட்சி மறுப்பு

நல்லாட்சி அரசாங்கத்திற்கு அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் மூலம் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சி மறுத்துள்ளது.

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு தடவை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் குறித்த பரிவர்த்தனை இடம்பெற்றதாக ஒப்பந்தத்தை ஆய்வு செய்த குழு தெரிவித்திருந்தது.

இந்த விடயம் குறித்து இன்று (திங்கட்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அமெரிக்க தூதரகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவிட்டது என்றும், இது குணருவான் அறிக்கையின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகளை மட்டுமே எழுப்புகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தம்மீது அவதூறு பரப்ப முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதேவேளை கொரோனாவை எதிர்த்துப் போராட உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட தொகையை தற்போதைய அரசாங்கம் எவ்வாறு கையாண்டது என்பதை வெளியிடத் தவறியது என்றும் அவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் அமெரிக்காவுடனான மிலேனியம் சவால்கள் ஒப்பந்தம் குறித்த அரசாங்கத்தின் முடிவை அவர்கள் அறிவிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.