சட்டங்களை மாற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சி – எம்.ஐ.மன்சூர்

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை  மாற்றம் செய்யவேண்டும் என்று தற்போதைய அரசாங்கம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது   என  முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் எம்.ஐ.மன்சூர்  தெரிவித்துள்ளார்.

அம்பாறை  திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் போட்டியிடும் இவர்   (திங்கட்கிழமை)  இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”   முஸ்லிம் மக்களின் உரிமை முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே இருக்கின்றது. எனவே தான் அதன் ஏற்பாட்டில் தொலைபேசி சின்னத்துக்கு வாக்களித்தால் மாத்திரமே அது சாத்தியப்படும்  என்பதனை புத்திஜீவிகளும் மக்களும் விளங்கி இருக்கிறார்கள்.

இன்று பல பேர் பல்வேறு கட்சிகள் சுயேட்சைக்குழுக்கள் ஊடாக   ஐக்கிய மக்கள் சக்திக்கு சவாலான முறையில் களமிறங்கியுள்ளனர்.இந்நிலைமை   மக்களை குழப்புகின்ற நிலைமையை தோற்றுவித்திருக்கின்றது. எவ்வாறென்றால் ஊருக்கு ஒரு நாடாளுமன்ற பிரதிநிதியை பெற்று விட வேண்டும் என்ற கோஷத்தோடு மக்களை குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

இது விகிதாசார தேர்தல் முறையில் காணப்படுவதுடன்  ஆகக்குறைந்தது 50 ஆயிரம் வாக்குகளை பெறாத எந்த கட்சியும்  நாடாளுமன்ற உறுப்பினரை பெறமுடியாது.

இதற்கு உதாரணம்  கடந்த முறை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பெற்றுக்கொண்ட 33 ஆயிரம் வாக்குகளால் ஒரு பிரதிநிதி பெறமுடியவில்லை என்ற பாடத்தை மக்கள் விளங்கி இருக்கிறார்கள்.

முஸ்லிம் மக்களை இவ்வாறானவர்கள்  முகஸ்துதிக்காக  சந்தித்திருக்கிறார்கள்.இதனால்  ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மிகப் பாரதூரமான நஷ்டத்துக்கு தள்ளப்படுகின்றனர்.இது  ஒரு எதிர்வினை நிலைமையை தோற்றுவிக்கும். இதனால் எதிர்கால சந்ததியின் எதிர்காலம் மிகப் பயங்கரமாக இருக்கும்.

ஏனென்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தோடு சட்டங்களை மாற்றிக் கொண்டு  இருக்க வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையில் உள்ள அரசாங்கம் இவ்வாறான சட்டதிட்டங்களை மாற்றியமைக்கக்கூடிய பெரும்பான்மை சில வேளை பொதுஜன பெரமுவிற்கு கிடைக்குமாக இருந்தால் அதன் பின்னர் அம்பாறை மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவத்தை  வைத்து  எமக்கான எந்த ஒரு அரசியலும் அணுகுமுறையும் ஒருபோதும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற ஒரு பாரிய ஆபத்து இருக்கின்றது”  என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.