ஈஸ்டர் தாக்குதல்: மைத்திரிக்கு நான்தான் முதலில் தகவல் வழங்கினேன்- சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தானே முதலில் தகவல் அளித்ததாக, அப்போதைய ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பிரதானியும், தற்போதைய தென் மாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபருமான ரொஹான் சில்வா தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இவ்வாறு தனது சாட்சியத்தினை பதிவு செய்துள்ளார்.

ஆணைக்குழுவில் ரொஹான் சில்வா மேலும் கூறியுள்ளதாவது,  “ஜனாதிபதியின் ஒவ்வொரு உள்நாட்டு, வெளிநாட்டு விஜயத்துக்கு முன்னரும் அவரது பாதுகாப்பை மையப்படுத்தி விஷேட உளவுத்துறை அறிக்கையை நான் பெற்றுக்கொள்வேன்.

அதேபோன்று ஒவ்வொரு மாதமும் அரச உளவுச் சேவையின் அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து பகுப்பாய்வு செய்வேன்.

அதன்படி 2019 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி அத்தகைய மாதார்ந்த பகுப்பாய்வு கூட்டம் நடந்தது. அந்த கலந்துரையாடலில் அரச உளவுச் சேவையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் லலித் நாணயக்கார பங்கேற்றார். அவர் ஈரான், ஈராக்கில் ஐ.எஸ். பின்வாங்கியுள்ள நிலையில், அவர்களின் உறுப்பினர்கள் அவர்களது சொந்த நாடுகளுக்கு திரும்புவதாகவும், அவ்வாறு திரும்புவோர் அவ்வந்த நாடுகளில் முஸ்லிம் அல்லாதோரை கொலைசெய்ய பணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் அதனால் ஜனாதிபதியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஒன்றும் அவர் கூறவில்லை.அதனால் நாம் உலகில் ஏனைய நாடுகளில் நடந்த சம்பவங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பகுப்பாய்வு செய்து ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்தினோம்.

இவ்வாறான பின்னணியிலேயே கடந்த 2019 ஏபரல் 12 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டக்களப்புக்கு சென்றார்.

அவர் அங்கு செல்லும் போதும் உளவுத் துறைக்கு சஹ்ரான் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் தகவல்கள், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தும் அவர்கள் அதனை எனக்கு தரவில்லை. உண்மையில் இவ்வளவு பாரதூரம் மிக்க உளவுத் தகவலை அவர்கள் கண்டிப்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி எனும் ரீதியில் எனக்கு தந்திருக்க வேண்டும்.

அத்துடன் இந்த தாக்குதல்கள் நடக்கும் வரை நாம் அவ்வாறு ஒரு தாக்குதல் நடக்கப் போகிறது என எந்த வகையிலும் அறிந்திருக்கவில்லை. தாக்குதல் நடக்கும்போது ஜனாதிபதி தனிப்பட்ட விஜயம் ஒன்றின் பொருட்டு சிங்கப்பூரில் இருந்தார். நான் தான் முதலில் ஜனாதிபதிக்கு இப்படி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது, தகவல்களை தேடிச் சொல்கிறேன் எனக் கூறினேன்.

நான் அதனை கூறியதும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் நான் பாதுகாப்புச் செயலாளரை தொடர்புகொள்கிறேன் எனக் கூறினார்” என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.