தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் மீது அக்கறையில்லை – பிரதமர்

வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு   மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே  செயற்படுகின்றது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று காலை  (புதன்கிழமை) அலரி மாளிகையில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 1977ஆம் ஆண்டின் பின்னர், 2005 –  2010ஆம் ஆண்டுகளில்  எங்கள் அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது பாரிய அபிவிருத்தி திட்டங்கள் பல மேற்கொள்ளப்பட்டன, அந்த மாகாணங்களில் மக்களின் வாழ்க்கையை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் திட்டங்களுடன்  எங்கள் அரசாங்கம் செயற்பட்டது.

எங்கள் அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்களைத் தவிர, முந்தைய நல்லாட்சி அரசாங்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்காக எந்தவொரு மேம்பாட்டுத் திட்டங்களையும் செயற்படுத்தவில்லை.

வடக்கு மக்களுக்காக முன் நிற்பதாக கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட அந்த மக்களின் உண்மையான பிரச்சினைக்கு பதிலாக அரசியல் இலாபம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் மாத்திரமே  செயற்பட்டது.

அந்த மக்கள் முகம் கொடுக்கும் பிரதான பிரச்சினையான குடிநீர் சிக்கலுக்கு தீர்வு வழங்குவதற்காக  எங்கள் அரசாங்கம் முதலிடம் வழங்குகின்றது    அதற்கான திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும்” என பிரதமர் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்