தரம் 01, 02, முன்பள்ளி ஓகஸ்ட் 10இல் ஆரம்பம் – கல்வியியல் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகள் ஜூலை 07 ஆரம்பம்

நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளினதும் தரம் 01, 02, முன்பள்ளிகளை எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் மீளத் திறப்பதற்கு, கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் மூடப்பட்ட அனைத்து கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கலாசாலைகளையும் ஜூலை 07ஆம் திகதி ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களை மீண்டும் திறந்து, அவற்றை மாணவர்களுக்கு வழங்குவது குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இடம்பெற்ற மிக நீண்ட கலந்துரையாடலை அடுத்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வழிகாட்டல்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இவ்வாறு திறக்கப்படும் ஒவ்வொரு பாடசாலைகளையும் கிருமி நீக்கம் செய்வது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு, கல்வி அமைச்சு, மாகாணக் கல்வி அமைச்சுகள் மற்றும் அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அனைத்து தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இரண்டாம் ஆண்டு பயிற்சி ஆசிரியர்களுக்கான (2017/2019 குழு) தங்கியிருந்து கற்கைகளைத் தொடரும் நடவடிக்கைகள் ஜூலை 07 முதல் ஜூலை 31 வரை இடம்பெறவுள்ளது.

அத்துடன் அனைத்து ஆசிரியர் கலாசாலைகளினதும் முதலாவது மற்றும் இரண்டாவது ஆண்டு பயிலுனர் ஆசிரியர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஜூலை 07 முதல் ஆரம்பிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தேசிய கல்வியியல் கல்லூரிகளின் மூன்றாம் ஆண்டு பயிலுனர் ஆசிரியர்கள் (2016/2018 குழு) தமது பாடசாலை பயிற்சிகளை (Internship) பூரணப்படுத்துவதற்காக, ஜூலை 07 முதல் ஜூலை 31 வரை பாடசாலைகளில் இணைக்கப்படவுள்ளார்கள்.

அத்துடன், தேசிய கல்வியியல் கல்லூரிகளின் இரண்டாம் ஆண்டு பயிலுநர் ஆசிரியர்கள் (2017/2019 குழு) தமது பாடசாலை பயிற்சிகளுக்காக (Internship) ஓகஸ்ட் 10 ஆம் திகதி பாடசாலைகளில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தேசிய கல்வியியல்  கல்லூரிகளின் முதலாம் ஆண்டு பயிலுநர் ஆசிரியர்கள் (2018/2020 குழு) தங்கியிருந்து கற்கைகளைத் தொடரும் நடவடிக்கை ஓகஸ்ட் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

தற்போது எமது நாடு மற்றும் கல்வி நிறுவனங்கள் வேகமாக வழமைக்குத் திரும்பி வருகின்ற நிலையிலும், பிள்ளைகளை சுகாதாரப் பழக்கங்களை விட்டும் தூரமாக்கி விடாது, அவர்களின் உடல்நலனை பாதுகாப்பதில் விழிப்புடன் இருக்குமாறு, அனைத்துப் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்களிடம் கல்வி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

5 கட்டங்களில்
பாடசாலைகளின்
மீள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 13ஆம் திகதி மூடப்பட்ட நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நான்கு கட்டமாக திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய கடந்த ஜூன் 29ஆம் திகதி, ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்காக திறக்கப்பட்டன.

2ஆம் கட்டமாக, தரம் 05, 13, 11 ஐச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை எதிர்வரும் ஜூலை 06 ஆம் திகதி ஆரம்பமாகும்.

3ஆம் கட்டமாக எதிர்வரும் ஜூலை 20 ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்

4ஆம் கட்டமாக ஜூலை 27 ஆம் திகதி தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

5ஆம் கட்டமாக ஓகஸ்ட் 10ஆம் திகதி தரம் 01, 02 மாணவர்களின் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்