புனித அந்தோனியார் தேவாலயத்தின் புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்ய நடவடிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலினால் மோசமாக சேதமடைந்த கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் எஞ்சிய புனரமைப்புப்பணிகளை விரைவில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.

புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு நேற்று (புதன்)  விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் தேவாலயத்தின் பாதுகாப்பை பலப்படுத்த துரித நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தேவாலயம் அமைந்துள்ள பகுதிக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு தேவாலய நிர்வாகி அருட்தந்தை.கே.ஏ. ஜூட் ராஜ் பெர்னாண்டோ விடுத்த வேண்டுகோளை அடுத்து, பக்தர்களின் பாதுகாப்பு கருதி ஜெம்பெட்டா பிரதேசத்தில் உள்ள பொலிஸ் காவலரணில் மேலதிக பொலிஸ் அதிகாரிகளை கடமையில் ஈடுபடுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு பாதுகாப்பு செயலாளர் பணிப்புரை வழங்கினார்.

புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட அக்கறை மற்றும் அர்ப்பணிப்புக்காக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இணைந்து தானும் நன்றி தெரிவிப்பதாக அருட்தந்தை. பெர்னாண்டோ தெரிவித்தார்.

நிதி காரணாமாக ஸ்தம்பித்துள்ள புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட பாதுகாப்பு செயலாளர், இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்வதற்கான நடவடிக்ககைகளை மேற்கொள்வதாக அருட்தந்தை பெர்னாண்டோவிடம் உறுதியளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் உடனடியாக தேவாலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் பங்களிப்பு செய்ததற்காக கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை வீரர்களுக்கு கத்தோலிக்க சமூகம் நன்றி தெரிவிப்பதாக அருட்தந்தை. பெர்னாண்டோ தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.