கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா?

கருணா அம்மானுக்குப் பொதுமன்னிப்பு எனில் முன்னாள் போராளிகளைக் கைதுசெய்யலாமா? – மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா

 மஹிந்தவின் பேச்சு நகைப்புக்கிடமானது என்கிறார் பொன்சேகா

“கருணா அம்மானுக்கு ஏற்கனவே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதெனில் அவர் தற்போது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் கைதுசெய்யமாட்டீர்களா? அப்படியெனில் முன்னாள் போராளிகளைத் தற்போது சந்தேகத்தில் கைதுசெய்வது எந்தவகையில் நியாயம்? பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பேச்சு நகைப்புக்கிடமாக இருக்கின்றது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

‘கருணா அம்மானின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவைதான். எனினும், முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்புக்குள் கருணா அம்மானும் உள்ளடங்குகின்றார். எனவே, அவருக்குப் பொதுமன்னிப்பளிக்கப்பட்டுவிட்டது’ எனத் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடனான நேற்றைய சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகச் செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டில் புனர்வாளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தற்போது கைதுசெய்யப்பட்டு வருகின்றார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைப் போர்க்களத்தில் கொன்றழித்தோம் என்று தற்போது பகிரங்கமாகத் தெரிவித்துவரும் கருணா அம்மான் சுதந்திரமாக நடமாடுகின்றார். அவர் இன்னமும் கைதுசெய்யப்படவில்லை.

இந்தநிலையில், அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடும் விதத்தில் பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார். சட்டமும் நீதியும் எல்லோருக்கும் சரி சமமாக இருக்க வேண்டும். ஆனால், இந்த ஆட்சியில் இதை நாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.