பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு படுகுழி வெட்டியிருக்கின்றார்கள். எம்.ஞானப்பிரகாசம்…

தமிழ் மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் எம்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் பொறியியலாளர் ஞானபிரகாசம் அவர்களின் ஊடக சந்திப்பு மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டிலே நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலிலே நான் தமிழ்தேசிய கூட்டமைப்பிலே முதன்முதலாக வீட்டுச் சின்னத்தில் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். நான் தமிழ்மொழி மீதும் தமிழ் இனத்தின் மீதும் தமிழ் மண்ணின் மீதும் நீண்டகாலமாக பற்றுதியுடன் செயற்பட்டவன்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. நிச்சயமாக தமிழ் மக்கள் ஒரணியில் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும். இப்போது பேரினவாத சக்திகளின் செயற்பாடு காரணமாக கிழக்கு மாகாணத்தின் இருப்பு பறிபோகும் நிலை காணப்படுகின்றது.தமிழ் மக்களின் கல்வி இருப்பு பண்பாடு கலாச்சாரம் முறையாக பாதுகாக்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பை வாக்குரிமையால் பலப்படுத்த வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையில் தமிழ்மக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படுமாயின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடையாளம் நாட்டிலே இல்லாமல் போகும் நிலை ஏற்படும். பேரினவாத கட்சிகள் தமிழ் பெயரில் கட்சிகளை உருவாக்கி அதற்குள்ளேயே தமிழ் என்று பெயரை சொருகி தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கு தமிழ்மக்களுக்கு படுகுழி வெட்டியிருக்கின்றார்கள்.

அக்குழிக்குள் தமிழ் மக்கள் வீழ்ந்து விடக்கூடாது. நாம் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பக்கு நூறு வீதம் வாக்களிக்க வேண்டும். மாற்றுக் கட்சிக்கு வாக்களித்தால் நாம் எமது வரலாற்றை இழக்கநேரிடும்.

தமிழ் மக்களுக்குரிய கட்சி தமிழ் கட்சியாகும். இப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிழக்கும் செயற்பாட்டில் சில்லறைக் கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளது.

எனவே தமிழ் மக்கள் சில்லறைக் கட்சிக்கும் பேரினவாதக் கட்சிக்கும் சோரம் போகாமல் தன்மானத் தமிழன் தமிழ் மக்களின் ஆதிக்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.