பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன்: ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பெண் வேட்பாளர் ரசிக்கா…

பாராளுமன்றம் சென்று தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பேன். அதற்கான அங்கீகாரத்தை மக்கள் வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பெண் வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பெண்களே. உடல் உறுப்புக்களை இழந்து பலர் அங்கவீனர்களாகவும் உள்ளனர். கணவனை பறிகொடுத்து பல ஆயிரம் விதவைகள் இருக்கின்றார்கள். கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற வயோதிப் பெண்கள் இருக்கிறார்கள். இவர்கள் தமக்கான உதவிகள் இன்றியும், போதிய வாழ்வாதார வசதியின்றியும் கஸ்ரப்படுகிறார்கள். இவர்களுக்கான திட்டங்கள் கடந்த காலங்களில் சரியாக முன்வைக்கப்படவில்லை.

எனவே இன, மத பேதமின்றி அம் மக்களுக்கான வாழ்வாதாரத்தை வழங்க வேண்டும் என்பதே எனது நோக்கம். கஸ்டரப்படும் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என நினைத்தே அரசியலில் இறங்கினேன். அத்துடன், சிலர் கடந்த 20, 10 வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். அவர்கள் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. தேர்தல் வரும் போது அதை இதை கொடுத்து வெல்கிறார்கள். ஆனால் அந்த நிலை இருக்க கூடாது. உண்மை வெல்ல வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேவையான வேலைகளை செய்ய முடியும். எனவே மக்கள் சரியானவர்களை மக்கள் இணங்காண வேண்டும்.

மக்களின் ஆணையுடன் நான் பாராளுமன்றத்திற்கு செல்வேன் என நம்புகின்றேன். அங்கு சென்றால் தமிழ் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன். மக்களது தேவைகளை அறிந்து அதற்கு தேவையான அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களின் கிராம அபிவிருத்தி, விவசாயம், மீன்பிடி போன்றவற்றை அபிவிருத்தி செய்வேன். பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு திட்டங்களை முன்மொழிந்து அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்தல், அரச உத்தியோகத்தர்களின் பதவி உயர்வுகள் மற்றும் சம்பளப் பிரச்சனைகளை தீர்த்தல், மத வழிபாட்டு தலங்களை புனரமைத்தல், வீதி புனரமைப்பு, கிராமிய உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தல், சுகாதார வைத்திய சேவையை விஸ்தரித்தல், கல்வி அபிவிருத்தி என பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பேன்.

மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். உண்மையாக, மக்களின் வறுமையை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். பாராளுமன்றம் சென்றால் அந்த 5 வருடமும் மக்களுக்காக மக்களுடன் நின்று காலத்தை கழிக்க விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.