காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசும் இராணுவமும் பொறுப்பு! கண்கண்ட சாட்சியங்கள் இருக்கும்போது தப்பவே முடியாது என்கின்றார் சம்பந்தன்

“இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு அரசும் இராணுவமும்தான் முழுப் பொறுப்பு.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

“இராணுவத்தினரிடம் பலர் சரணடைந்தமைக்கும், அவர்களால் பலர் கைதுசெய்யப்பட்டமைக்கும் கண்கண்ட சாட்சியங்கள் உள்ளன. எனவே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு அரசும், இராணுவமும் பொறுப்புக்கூறியே ஆகவேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசும், இராணுவமும் தப்பவே முடியாது” எனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

‘தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தவர்களை அந்த அமைப்பினரே கொன்று உடலை மறைத்தனர். எனவே, இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எனக் கூறப்படுபவர்கள் அப்படி காணாமல்போயிருக்கலாம் அல்லது போரில் இறந்திருக்கலாம். இராணுவத்தினரிடம் சரணடைந்த அனைவரும் புனர்வாழ்வு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் சம்பந்தன் கருத்துரைக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறுதிப் போரில் இராணுவத்தினரைக் களத்தில் நின்று வழிநடத்திய தளபதிகளில் தற்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவும் ஒருவர். அவருக்கு அங்கு நடந்த உண்மை நிலைவரம் தெரியும். எனவே, உண்மைத் தகவலை அவர் வெளியிட வேண்டும். அதைவிடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பழியைப் போட்டுவிட்டு அவர் தப்ப முடியாது.

இறுதிப் போரில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் அவருக்கு எதிராக ஐ.நாவில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் அமெரிக்காவுக்கு நுழையக்கூட அந்நாட்டு அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இறுதிப் போர் தொடர்பிலும், சரணடைந்தவர்கள் குறித்தும், காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றியும் இராணுவத் தளபதி தற்போது வெளியிடும் கருத்துக்களை நம்பவே முடியாது” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.