விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்! – மஹிந்த அணிக்கு மைத்திரி பதிலடி

“பதாதைகளில் இருக்கும் எனது பெயர் மற்றும் உருவத்தை மறைக்கலாம். ஆனால், பொலனறுவை மக்களின் உள்ளத்தில் பதிந்திருக்கும் எனது பெயரை யாராலும் மறைக்க முடியாது. அத்துடன் எமது கூட்டணியில் இருக்கும் சிலர் எனக்கு எதிராக மேற்கொண்டுவரும் விமர்சனங்களைக் கண்டு நான் ஒருபோதும் அஞ்சவேமாட்டேன்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட முதன்மை வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலனறுவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“பொலனறுவை மாவட்டத்தில் பெயர்ப்பலகைகளில் இருக்கும் எனது பெயர்களை யார் வேண்டுமானாலும் மறைக்கலாம். ஆனால், பொலனறுவை மக்களின் உள்ளங்களில் இருந்து எனது பெயரை யாராலும் மறைக்கமுடியாது என்பதை அவர்களுக்கு கூறிக்கொள்கின்றேன்.

ஏனெனில் எனது 52 வருட அரசியல் வாழ்க்கையில் பொலனறுவை மாவட்டத்துக்கு பல வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றேன்.

எனவே, அடுத்துவரும் ஆட்சியில் பொலனறுவை மாவட்டத்துக்கு 10 வருட வேலைத்திட்டத்தை மேற்கொள்வேன். ஆகஸ்ட் 5ஆம் திகதிக்குப் பின்னர் உருவாகப்போவது நாட்டை ஆட்சி செய்த மூன்று ஜனாதிபதிகளின் ஆதரவுடனான நிலையான அரசாகும். அதனால் மக்கள் தகுதியானவர்களை மாத்திரம் தெரிவுசெய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.