கட்சி குறித்து சிந்தித்தாரே தவிர மக்களைப் பற்றி விக்னேஸ்வரன் சிந்திக்கவில்லை- பிமல்

வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், கடந்த 5 வருடகாலமாக மக்கள் தொடர்பாக சிந்திக்காது, தனது கட்சி குறித்தே சிந்தித்து வந்தார் என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பிமல் ரத்நாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாட்டில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் தான் சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், சாதாரண மக்கள் பெரும் சவால்களுக்கு மத்தியிலேயே தங்களின் வாழ்க்கையை கொண்டுச் செல்ல வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டம் வறுமை நிலைக்கு சென்றமைக்கும் இதுவே பிரதானமாக உள்ளது.

கல்வியில் வடக்கு மாகாணம் இன்று பின்நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிறைந்த காலப்பகுதியில் இணையத்தளம் ஊடான கல்வி முன்னெடுக்கப்படுகின்றது.

ஆனால் அதிகளவான பாடசாலை மாணவர்களிடம் தொலைபேசிகள் கூட இல்லை. இதுதான் இன்றைய இலங்கையின் நிலைமை.

கடந்த 5 ஆண்டு காலமாக வட.மாகாண சபை இம்மக்களுக்கென எதனை செய்துள்ளது. தொழில் வாய்ப்பை அதிகரித்து, பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலான பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்திருக்க முடியும்.

ஆனால், இதற்கான நிதி அனைத்தும் திரைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. வடக்கின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கடந்த காலத்தில் தனக்கான கட்சி ஒன்றை அமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தினாரே ஒழிய, மக்கள் வாழ்வாதாரம் தொடர்பாக அவர் சிந்திக்கவில்லை. இதனை மக்களும் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.