திருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்! தேர்தலில் நிரூபித்துக் காட்டுவோம்; தலைவர் சம்பந்தன் அறைகூவல்

“திருகோணமலை தமிழர்களுக்குச் சொந்த மண் என்பதை இம்முறை பொதுத்தேர்தலில் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலையிலுள்ள அவரது வீட்டில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“திருகோணமலையில் மிக நீண்ட காலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதிக்கத்தைச் செலுத்தி  வந்தது.

நடைபெறவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தல் திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தலாகும்.

இந்த மாவட்டத்தில் போட்டியிடுகின்ற கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த மக்கள் ஆணையைப் பெற வேண்டும்.

இந்த ஆணையானது நாங்கள் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கும், அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அரசுடனும், சர்வதேசத்துடனும் பேச்சுகளை நடத்த ஒரு முன்னுதாரணமாக இருக்கும் என்று நம்புகின்றேன்.

இந்தத் திருகோணமலை மண்ணில் பாரம்பரியமாக – நூற்றாண்டுக்கணக்காக வாழ்ந்து வருகின்ற தமிழர்கள் இந்த மண்ணுக்கே உரியவர்கள் என்பதை நாங்கள் நிரூபிக்க வேண்டுமாக இருந்தால் சிறந்த ஆணையை திருகோணமலை மாவட்ட மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

அற்ப சொற்பமான வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகளுக்கு உங்களுடைய பொன்னான வாக்குகளை அளித்து அதைச் சீரழிக்க வேண்டாம்” – என்றார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள், கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Attachments area

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.