அரசியல் தீர்வுக்கான முயற்சிகளுக்குச் சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காகவும் செயற்படுவோம்! வடமராட்சி கிழக்குப் பரப்புரைக் கூட்டத்தில் சுமந்திரன் விளக்கம்

56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வுக்கும் 77 இல் தனிநாட்டிற்காகவும் வாக்களித்து வந்தார்கள். இதனடிப்படையில் சமஷ்டி என்பது எமது மக்களின் நீண்ட கால ஜனநாயகத் தீர்ப்பாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்கில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில் –

2015 ஆண்டு நல்லிணக்க அரசாங்கத்தை உருவாக்கினோம். அந்த ஆட்சி முன்னேற முடியாமல் கவிழ்ந்து பழையபடி முன்னர் ராஜபக் ஆட்சிக்கு நாடு சென்று
விட்டது.

ஆனால் பழையபடி ராஜபக்க்களின் ஆட்சிக்கு நாடு சென்றுவிட்டது என்பதை சரியான விளக்கமாக நாங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவும், பிரதமர் மஹிந்த ராஜபக்rவும் சகோதரர்களாக இருந்தாலும் இருவருக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.

அண்ணன் 24 வயதில் நாடாளுமன்றத்திற்குச் சென்றவர். இப்போது 50 வருட நாடாளுமன்ற வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தான் மஹிந்த பயிற்றப்பட்டவர். அவரை ஜனநாயகவாதி என்று யாரும் சொல்லாவிட்டாலும், அவருடைய பயிற்சி முழுவதும் நாடாளுமன்றத்தில்தான் இருந்தது.


இதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்rவின் பயிற்சி முழுவதும் இராணுவத்துடன் தொடர்பட்டே இருந்தது.

இராணுவத்திலே கேள்வி கேட்கும் உரிமை கிடையாது, மாற்றுக் கருத்துக்கு உரிமை கிடையாது, கலந்துரையாடலுக்கு உரித்து இருக்காது. கட்டளையிடுவதும், இடப்படும் கட்டளையை நிறைவேற்ற வேண்டியதுமே இராணுவத்தின் பயிற்சியில் உள்ளது. இவ்வாறான பின்புலத்தில் இருந்து வந்தவர் இன்று நாட்டில் தலைவராக வந்துள்ளார்.

அதனால்தான் இன்றைய ஆட்சி முறை இராணுவமயப்பட்டதாக உள்ளது. குறிப்பாக அரச திணைக்களங்கள் மற்றும் செயலணிகளுக்கும் இளைப்பாறிய இராணுவ அதிகாரிகளை நியமிக்கின்றார். இது ஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய சவால். நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியும் இப்போது இரண்டாக உடைந்து போயுள்ளது. எனவே அரசை எதிர்க்க சக்தி இல்லாத எதிர்கட்சிதான் நாட்டில் உள்ளது.

தமிழ் மக்களுடைய பிரதிநிதித்துவம் இதுவரை காலமும் ஒரே மாதிரியானதாகத்தான் இருந்து வருகின்றது. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்கள் சமஷ்டித் தீர்வுக்கே வாக்களித்து வந்தார்கள்.

சமஷ்டி என்பது நீண்ட கால ஜனநாயகத் தீர்ப்பாகும். அதில் எந்தவித சலனமும் இடையில் ஏற்படவில்லை. 56 ஆம் ஆண்டில் இருந்து தமிழரசுக்கு மட்டுமே ஆணைகொடுத்து வந்துள்ளார்கள். சமஷ்டி என்பதுதான் மக்கள் தந்த ஆணை. இருப்பினும் 77 ஆம் ஆண்டு தேர்தலின் போது தனிநாட்டுக்கான ஆணையையும் கொடுத்தார்கள்.

யுத்த காலத்தில் மக்களுடைய பிரதிநிதித்துவம் இல்லாத நாடாளுமன்றமும் இருந்திருக்கின்றது. அல்லது கேலிக்கூத்தான தேர்தல்களில் சிலர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். யுத்தம் முடிந்த பின்னர் மீண்டும் தமது பிரதிநிதிகளை மக்கள் வாக்களித்து தெரிவு செய்யலாம் என்ற சூழ்நிலையில் எங்களுடைய ஒரே நிலைப்பாட்டை தெரியப்படுத்துவது அவசியமானது.

இப்போது மாற்று கட்சிகள் என்று சொல்லி பலர் முன்வருகின்றார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, இதனால் மாற்று அணி ஒன்று வேண்டும் என்று கூறி வருகின்றவர்களின் எதிர்பார்ப்பு தமக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை என்பது முழுமையான பொய்யான பிரச்சாரமாகும். விசேடமாக கடந்த 5 ஆண்டில் ஓர் அரசியல் தீர்வினைக் கொண்டு வருவதற்கு முயற்சித்தோம்.

அதிகாரப் பரவல் தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் இணங்கிய வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசமைப்பு நிறைவேறாவிட்டாலும், அது முக்கியமான மைல் கல்லாகும்.

மக்களின் நாளாந்த பிரச்சினைகளுக்கு விடிவு பெற்றுக் கொடுத்துள்ளோம். குறிப்பாக இராணுவத்திடம் இருந்த ஏராளமான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் சில மாதங்களுக்குள்ளேயே 3 இல் 2 பங்கு அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

முழு நாட்டையும் ஒப்பிட்டு பார்க்கின்ற போது மற்றைய பிரதேசங்களில் நிகழாத அபிவிருத்திகள் வடக்கு, கிழக்கில் நடந்துள்ளன. சர்வதேச விமான நிலையம்
திறக்கப்பட்டது. மயிலிட்டி துறைமுகம் விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறை மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படுகின்றது. இவ்வாறு பலவிதமான அபிவிருத்திகள் இங்கு நடத்திருக்கின்றன.

இதேநேரம் பல விடயங்கள் இன்னும் செய்யப்படாமல் விடப்பட்டுள்ளன என்பதும் உண்மை. ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று சொல்வது முழுமையான பொய்யாகும்.

இனிவரும் காலத்தில் விசேடமாக ஒரு வேலைத் திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். குறிப்பாக தமிழ் மக்களின் பொருளாதார மீட்சியாகும். மக்களுக்கு அரசியல் தீர்வு வரும்வரைக்கும் காத்திருக்காமல் சில விடயங்களைச் செய்யத் தீர்மானித்துள்ளோம். மக்கள் சுயமரியாதையுடன் வாழ வேண்டும்,

இவ்வாறு வாழ வேண்டுமாக இருந்தால் மக்கள் தமது சொந்த காலில் நிற்க வேண்டும். மற்றவர்களிடம் கையேந்தி நிற்கக் கூடாது. அப்படியான மாற்று பொருளாதார கட்டமைப்பை கொண்டுவருவதற்கு பல முன்னெடுப்புக்களை செய்துள்ளோம்.

தேர்தலுக்கு பின்னர் அத்திட்டங்களை அமுல்படுத்த உத்தேசித்துள்ளோம். இதில் முக்கியமான விடயமாக இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.

இளைஞர்களுக்கு வேலை இல்லாதுவிட்டால் அவர் கள் வெளிநாட்டிற்குத்தான் போவார்கள். அரசியல் தீர்வை கவனிக்கும் போது சமாந்திரமாக பொருளாதார மேம்பாட்டிற்காக வேலை செய்வோம்.

இவற்றை செய்ய வேண்டுமானால் நாங்கள் பலமான அணியாக நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். வேறு அணிகளுக்கு வாக்குகள் போகுமாக இருந்தால் அவை வீணாகவும், சிதைவடைந்து போகும் வாக்குகளாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை 10 ஆசனங்களுக்குள் அடக்கிவிட்டு ஏனைய கட்சிகளில் இருந்து ஒருவர், இருவர் நாடாளுமன்றத்திற்கு சென்றால் அதை விட பலவீனமான சூழல் என்று ஒன்று இருக்க முடியாது.

எனவேதான் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் ஓர் அணியாக நிற்க வேண்டும். – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.