தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையை ஏற்படுத்தி அரசியல் இலாபம் ஈட்டவே முயற்சி- சஜித்

தற்போதைய அரசாங்கம் இனங்களிடையே பகைமையினை ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் இலாபம் அடையும் செயற்பாடுகளையே முன்னெடுத்துவருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் பிரதமர் வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த நாட்டில் புதிய ஆரம்பம், புதிய ஆட்சி முறை, புதிய சிந்தனையாளர்களே தேவை எனவும் அவற்றின் மூலமே நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரைக்கான அலுவலகம் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு சென்றல் வீதியில் இன்று திறந்துவைக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் ஜோன் பாஸ்டர் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்புவிழாவில் ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி உட்பட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

அலுவலகம் திறந்துவைக்கப்பட்டதைத் தொடர்ந்து உரையாற்றிய சஜித் பிரேமதாச, “கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 150இற்கும் மேற்பட்ட கிராமங்களை உருவாக்கியதுடன் ஆயிரக்கணக்கான வீடுகளையும் அமைத்துள்ளேன். இலங்கையில் அதிகளவான வீட்டுத் திட்டங்களை இங்கு நான் அமைத்துள்ளேன்.

நான், தமிழ் மக்களின் கடந்த கால வேதனைகளை உணர்ந்தவன். அதன் காரணமாக கடந்த காலத்தில் இந்த மாவட்டம் தொடர்பாக விசேட கவனம் செலுத்திவந்தேன்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒருவரைத் தெரிவுசெய்து எனக்குத் தந்தால் அவரை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக்கி இந்த மாவட்டத்திற்குத் தேவையான அனைத்த வேலைத் திட்டங்களையும் செய்வதற்கு தயாராகியிருக்கின்றேன்.

நாங்கள் இன்னுமின்னும் போலியான கருத்துகளுக்கும் உணர்வுமிக்க வழிகாட்டலுக்கும் பின்னால் சென்று எமது சமூகத்தினை தவறான பாதைக்கு கொண்டுசெல்லாமல் அவர்களை சிறந்தவர்களாக மாற்றுவது ஒவ்வொருவரது கடமையாகும்.

இந்த நாட்டில் வறுமை நிலை உச்சத்தில் இருக்கின்றது. இந்நிலையில் குடும்பங்களை தலைமைதாங்கும் பெண்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. நான் ஆட்சியமைக்கும் பட்சத்தில் இந்த நாட்டில் வறுமை நிலை நீக்கப்பட்டு குடும்பங்களை தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்திற்கான விசேட ஏற்பாடுகளைச் செய்வேன் என உறுதியளிக்கின்றேன்.

இந்த நாட்டில் புது ஆரம்பம் தேவை, புதிய ஆட்சிமுறை தேவை, புதியதாக சிந்திப்பவர்கள் தேவை. அவற்றின் மூலமே இந்த நாட்டில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி அனைவரும் மகிழ்ச்சியாக வாழும் சூழ்நிலையினை ஏற்படுத்தமுடியும். அந்த மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு நான் தாயராகயிருக்கின்றேன்.

தற்போதுள்ள அரசாங்கம் இந்த நாட்டில் இனங்களிடையே மதங்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வேலைத் திட்டங்களையே முன்னெடுத்துவருகின்றது. தமிழர்களுக்கு விரோதமாக முஸ்லிம்களையும், முஸ்லிம்களுக்கு விரோதமாக சிங்களவர்களையும், தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களையும் பகைமையூட்டி இனங்களிடையே மோதல்களை ஏற்படுத்தி அதன்மூலம் அரசாங்கம் அரசியல் இலாபமீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.