ரிஷாத், ஹக்கீமுடன் நானும் கட்டாயம் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும்! அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டில் அமீர் அலி உரை 

“புதிய நாடாளுமன்றத்தில் கட்சி, கொள்கைக்கு அப்பால் அனுபவமும் ஆளுமையும் கொண்ட நல்ல அரசியல் தலைவர்கள் இருக்க வேண்டும். அந்தவகையில் கண்டியிலிருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், வன்னியிலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீனும், மட்டக்களப்பு – கல்குடாவிலிருந்து அமீர் அலியும் புதிய நாடாளுமன்றத்தில் இருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு வரும் அவலங்களிலும் உரிமை விடயங்களில் ஏற்படக்கூடிய திண்டாட்டங்களிலும் பாதுகாப்பாக அமையும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இளைஞர் மாநாட்டின் முதலாம் கட்டம்  காவத்தமுனை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மட்டக்களப்பு மாவட்டத்தில் அகில மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் மட்டக்களப்பு மக்களும் நன்மை அடையும் விதமாக அனுபவம் ஆளுமைகொண்ட நல்ல தெரிவுகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கடைசிப் போராளி உயிரோடு இருக்கும் வரை இந்த நாட்டு முஸ்லிம்களின் உரிமைகளுக்கான – நீதிக்கான போராட்டம் தொடரும்.

கல்குடாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு முகவர்கள் மாத்திரம் இருக்கின்றார்களே தவிர தலைவர்கள் கிடையவே கிடையாது.

கடந்த மூன்று ஆண்டுகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இளைஞர் குழு நல்ல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

எனவே, வருங்காலத்தில் கல்வி, விளையாட்டு, போதை ஒழிப்பு என அனைத்து நல்ல விடயங்களின் பக்கம் செல்லவும் தீய விடயங்களின் இலிருந்து விலகி நடக்கவும் எமது இளைஞர்கள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும்” – என்றார்.

இந்த நிகழ்வில் விசேட அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் முஷாரப் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் ஆசிரியர்,
நெளபர், ஜெளபர், சட்டத்தரணி ராசிக், வைத்தியர் அப்தாப் அலி, இணைப்பாளர் மீரான் ஹாஜி, மெளலவி
தன்சீல், வட்டாரக் குழுத் தலைவர்களான நாஸர், பாறூக், றியாஸ் மற்றும் பிரமுகர்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.