ஆயுத விவகாரம்: விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை

ஆயுதங்கள் கொண்டுச் சென்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சிரேஸ்ட்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2003-03-14ஆம் திகதி, மட்டக்களப்பு- கல்லடி பாலத்திலுள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டனர்.

இதன்போது குறித்த வாகனத்தில் இருந்து நான்கு கைக்குண்டுகளும் 100 தோட்டாக்களும் மீட்கப்பட்டிருந்தன.

இதனடிப்படையில் அதில் பயணித்த எட்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள், கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு இடம்பெற்று வந்தது.

அதனைத் தொடர்ந்து மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட பிணை மனுவின் அடிப்படையில் 2004ஆம் ஆண்டு குறித்த எட்டுப்பேரும் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டு வந்தது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், அரச பகுப்பாய்வு திணைக்களம் ஆகியவற்றின் அரச தரப்பு சாட்சியங்கள் பெறப்பட்டு எதிர்த்தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த  வழக்கின் எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், எதிரிகளின் பிரத்தியேக உடமைகளில் குறித்த ஆயுதங்கள் இருக்காத நிலையிலும் ஆள் அடையாளம் தொடர்பாக அரச தரப்பில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த தவறியதால் மேன்முறையீட்டு நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா, கடந்த 22-06-2020  அன்று சகல எதிரிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.