வடக்கு- கிழக்கு இணைப்பு: சர்வதேச மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பை கோரும் சி.வி

வடக்கு- கிழக்கு இணைப்பு மற்றும் சமஷ்டி அரசியலமைப்பு தொடர்பாக சர்வதேச மேற்பார்வையுடன் வடக்கு– கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என வடக்கின் முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த சில பிழையான தீர்மானங்களினால்தான் இன்று நாங்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம்.

எனவே வீட்டிலிருந்து விடுபட்டு எங்களுடைய மீன் சின்னத்திற்கு வாக்களிக்க அனைவரும் முன்வாருங்கள்.

மேலும் எங்களுடைய கட்சி அனைவரையும் ஒன்றிணைத்து செல்லும் முழுமையானதொரு சிந்தனையுடன் பயணிக்க இருக்கின்றது.

அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலத்துக்கு காலம் எண்ணங்களை மாற்றிக்கொண்டு இருக்கின்றது.

ஆகவே எமது பகுதிகளில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்காக நாங்கள் புலம்பெயர் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

மேலும் தன்னாட்சி ரீதியான அரசியல் ரீதியான தீர்வினைப்பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் நாடாளுமன்றம்சென்று அதனை செய்வோம்.

பெரும்பான்மையினர் ஒருபோதும் எங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கமாட்டார்கள்.

ஆகவே வடக்கு- கிழக்கு மக்களிடம் உங்களுக்கான தீர்வு எதுவாக இருக்கவேண்டும் என்று நாங்கள் கேட்போம். ஐநாவின் கண்காணிப்பில் வடக்கு -கிழக்கு மக்களுக்கு எவ்வாறான தீர்வு வேண்டும் என்பதை அறிந்து அது தொடர்பான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.