இராணுவத்தினருடன் வருகைதந்த பிக்கு: நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக தமிழ் மக்கள் சந்தேகம்

மட்டக்களப்பு- வெல்லாவெளி, வேற்றுச்சேனை பகுதிக்கு பௌத்த பிக்கு ஒருவர், பெருமளவான படையினருடன் வருகைதந்து, அங்குள்ள காணியொன்றை பார்வையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த காணி, தங்களுக்கு உரித்துடையது என அப்பிரதேச மக்களிடம் தெரிவித்துள்ளார்.

வேற்றுச்சேனையில் ஒதுக்குப்புறமாகவுள்ள பகுதியொன்றினையே குறித்த பௌத்த பிக்கு, இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் பாதுகாப்புடன் வருகைதந்து நேற்று (சனிக்கிழமை) பார்வையிட்டதாக  மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த பகுதியில், ஒரு மாதத்திற்கு முன்பாக அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு மைதானம் ஒன்றை அமைக்க முற்பட்டிருந்த வேளையில் அங்குவந்த வெல்லாவெளி பொலிஸார், அவற்றினை தடுத்தி நிறுத்தியதுடன் இது அரச பகுதி என்பதனால் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்க வேண்டாமென கூறிச்சென்றனர் எனவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிக்கு, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஊடாக  நிலத்தை பார்வையிட்டு சென்றுள்ளமை தொடர்பாக மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அதாவது வேற்றுச்சேனைக்கு அருகில், மண்டூர் கந்தசுவாமி ஆலயம் காணப்படும் நிலையில், பௌத்த தேரர்களின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து தமிழ் மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் கிழக்கு தொல்பொருட்கள் செயலணி ஒன்று அமைக்கப்பட்டதை தொடர்ந்தே மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறன அத்துமீறல்கள் இடம்பெற்று வருகின்றன எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.