சர்வதேச ஒப்பந்தத்தில் இருதரப்பு உடன்பாடும் முக்கியம்- மஹிந்த

சர்வதேச ஒப்பந்தமொன்றை செய்துக் கொள்ளும்போது, இரண்டு தரப்பு உடன்பாடும் மிக முக்கியமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வீரக்கெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,  “நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் கடந்த 5 வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட வேலைத்திட்டத்தை நாம் வேகமாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.

அபிவிருத்திகளை மேற்கொள்ளும் போது ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றுக்கும் இடையில் முரண்பாடுகள் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் எந்தவொரு நாட்டையும் முன்னேற்ற முடியாது.

இந்த நிலையில், தற்போது சஜித் பிரேமாச கூறுகிறார், தன்னால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று. ஆனால், அவரை விட என்னால் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற முடியும்.

கடந்த காலங்களில் மக்கள் அவர்களை ஆட்சியில் அமர்த்தி, இந்த நாட்டுக்கு என்ன நடந்தது என்று எமக்கு நன்றாகத் தெரியும்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பாக மக்களுக்குத் தெரியும். சஜித் பிரேமதாசவின் ஒவ்வொரு பேச்சுக்களும் எமது தரப்பைத் தான் பலப்படுத்துகிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

அவர்கள் வாக்கு விகிதம் குறைந்துக் கொண்டே செல்கிறது. கடந்த காலங்களில் இவர்கள் தான் நாட்டின் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு தாரை வார்த்தார்கள்.

இவற்றை நாம் மறந்து விடவில்லை. எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பாக ஆராய நாம் ஆணைக்குழுவொன்றை நியமித்து, இன்று அறிக்கையையும் பெற்றுக் கொண்டுள்ளோம்.

அதில் உள்ள சில சரத்துக்களால் இந்த உடன்படிக்கையை செய்துக் கொள்ளப்போவதில்லை என்று சுட்டிக்காட்டி, நாம் அமெரிக்காவுக்கும் இந்த அறிக்கையை அனுப்ப எதிர்ப்பார்த்துள்ளோம்.

ஒரு உடன்படிக்கையை வேண்டாம் என கூறுகின்றோம் எனில், அது எதற்காக என்பதை மக்களும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.