மகிந்த அடிக்கடி தீர்வைப்பற்றி பேசுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினாலேயே சுரேந்திரன் –

அன்மைக் காலமாக பிரதமரும் பாராளுமன்ற வேட்பாளருமான மகிந்த ராஜபக்ஸ அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமை பற்றியும் அடிக்கடி பேசுவதற்கு கடந்த அரசாங்கத்தில் கூட்டமைப்பு முன்னெடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளே காரணமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தமிழ்மக்கள் மீது பேரழிவை ஏற்படுத்திய இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை பலமிழக்க செய்ததற்கு வெளிநாடுகளின் ஆதரவை பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ஸ போரை முடிவுறுத்திய பின்னர் தமிழ்மக்களுக்கு தீர்வை வழங்குவேன் என வாக்குறுதி வழங்கியதுடன் போர் முடிவடைந்த பின்னர் இலங்கைக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரிடமும் தீர்வு தொடர்பாக உறுதிமொழி அளித்திருந்தார்.
இருப்பினும் போர் மௌனிப்பை தமது வாழ்நாள் சாதனையாகவும் பெருவெற்றியாகவும் கருதி அதன் விம்பத்தில் அடுத்தடுத்து தேர்தல் வெற்றிகளை கண்டதும் தமிழர்களை தோல்வியுற்ற தரப்பாகவும் பலமிழந்த  தரப்பாகவும் நடாத்தியதுடன் இறந்தவர்களை நினைவுகூறும் நிகழ்வுகள் உட்பட அனைத்து உரிமைகளையும் மறுத்து வந்ததுடன் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட தீர்மானங்களையும் உதாசீனம் செய்து தமிழர்களை சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்த வேளையில் தூரதோக்கோடும் இராஜதந்திரத்துடனும் அரசியலை அணுகிய கூட்டமைப்பு 2014 ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கி அவரை வெற்றிபெற செய்ததன் மூலம் தம்மை தோற்கடிக்க முடியாது என எண்ணியிருந்த ராஜபக்ஸ குடும்பத்தை தோல்வியின் வலியை உணர வைத்ததுடன் அவர்களால் தமிழர்களுக்கு மறுக்கப்பட்ட பல அடிப்படை உரிமைகளையும்  மீட்டெடுக்க முடிந்தது .
ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கியதேசிய கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த அரசிற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கியதன் மூலம் நாட்டில் ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட பல ஜனநாயக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டதுடன் புதிய அரசியல் யாப்பிற்கான அடித்தளமும் போடப்பட்டது.
இவை அனைத்திற்கும் மேலாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட சர்வதேச இராஜதந்திர  நடவடிக்கையும் அதனால் ஏற்பட்ட சர்வதேச நாடுகளினதும் அமைப்புக்களினதும் அழுத்தமுமே
மனித உரிமைகளையும் அரசியல் தீர்வையும் உதாசீனம் செய்துவந்த மகிந்த ராஜபக்ஸவை தற்போது அரசியல் தீர்வுபற்றியும் மனிதவுரிமைகள் பற்றியும் அடிக்கடி பேசவைத்துள்ளது.
அதுவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கையை தமது திட்டங்களுக்கு பணிய வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின்
மனித உரிமைகள் அமர்வுகளில் பிரேரணைகளை கொண்டுவந்து தமிழர்களின் பெயரில் தமது நலன்களை முன்னிறுத்திவந்த நிலைமாறி முதற்தடவையாக இலங்கையின் இணை அனுசரணையுடன் ஒரு பிரேரணையை கொண்டுவந்து பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டமையே இன்று மகிந்த ராஜபக்ஸவை தீர்வுத்திட்டம் தொடர்பில் பேச வைத்துள்ளது. இது கடந்த அரசாங்க காலத்தில் கூட்டமைப்பு மேற்கொண்ட மிக முக்கியமான நகர்வாகும். இதனால் இலங்கையை தன்னைத்தானே குற்றவாளி கூண்டில் நிறுத்தவைத்துள்ளது. தற்போதைய அரசாங்கம் அதிலிருந்து விலகவும் முடியாமல் நடைமுறைப்படுத்தவும் முடியாமல் தடுமாறி வருகின்றது.
தேர்தல் மேடைகளில் தங்களைத்
தாங்களே மாற்று என கூறிக்கொண்டு கூட்டமைப்பு என்ன செய்தது என கேள்வி கேட்கும் உதிரிகள்  இதை நன்றாகத் தெரிந்து கண்டுள்ளனர். அடிக்கடி ஜெனிவா செல்வதும் ஊடகங்களுக்கு காரசாரமாக அறிக்கை விடுவதும் போலி முகநூல்களில் மற்றவர்களை வசைபாடுவதும் ஒருபோதும் தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை என்பதுடன் இவ்வாறானவர்கள் பாராளுமன்றம் சென்று எதையும் சாதிக்கப்போவதுமில்லை.
எனவே தமிழ்மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் காத்திரமான நடவடிக்கைகளை உணர்ந்துகொண்டு தமிழ் மக்களுக்காக சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து ஆக்கபூர்வமாக பயணிக்கும் கூட்டமைப்பை இம்முறை தேர்தலில்  மேலும் பலப்படுத்தி எமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதுடன் அதற்கு சமாந்தரமான எமது இனத்திற்கான தற்சார்பு பொருளாதார கட்டமைப்பையும் வளர்த்தெடுப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.