அங்கஜனுக்கு உடனே நடவடிக்கை எடுக்குக! தேர்தல் ஆணைக்குழுவில் குணாளன் முறைப்பாடு

சிறிலங்கா சுத்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் தேர்தல் விதிமுறைகளை மதிக்காமல் செயற்படுகின்றார். அவரது அலுவலகத்தில்  அவரது படமும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பில் தேர்தல் திணைக்களத்தில் என்னால் முறையிடப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்காதமை வேதனையளிக்கின்றது. சப்ரிகம வேலைத் திடடங்களிலும் தேர்தல் விதிமுறைகளுக்கு முரணாக அங்கஜன் செயற்பட்டு வருகின்றார்.

– இவ்வாறு தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி உப தலைவர் கருணாகரன் குணாளன்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு;ளவை வருமாறு:-

C/028 என்னும் முறைப்பாட்டுக்கு அமைவாக 01-07-2020 அன்று யாழ்.மாவட்ட தேர்தல் நிலையத்தில் எழுத்துமூல முறைப்பாட்டுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை எனக்குப் போதியளவு திருப்திகரமானதாக அமையவில்லை.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் வைக்கப்பட்டுள்ள பதாகை இன்னமும் முற்றாக மறைக்கப்படவில்லை. அங்கஜன் இராமநாதன் மற்றும் மைத்திரிபால சிறிசேனா போன்றோரின் உருவப்படங்கள் மாத்திரமே பாதியளவு மறைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், கட்சியின் தேர்தல் சின்னமாகிய கை வெளிப்படையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையானது சட்டவிரோத செயற்பாடாகும். அது தொடர்பான ஆதாரத்தையும் இந்த முறைப்பாட்டுடன் கையளிக்கின்றேன்

கோயில்களில், வணக்கஸ்தலங்களில் வேட்பாளர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாதென்று தேர்தல் ஆணைக்குழு உத்தரவிட்டிருந்த போதிலும் வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கோயில்களில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றார். அதற்கான ஆதாரத்தையும் நான் கையளிக்கின்றேன்.

மக்கள் வரிப்பணததில் ஜனாதிபதியால் பிரதேச செயலகங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற சப்ரிகம என்னும் அபிவிருத்தித் திட்டங்களைக் கையளிக்கும் செயற்பாடுகளில் நேரடியாகக் கலந்துகொள்வது மாத்திரமல்லாது, அதனைப் படம்பிடித்து முகநூல்களிலும் கப்பிட்டல் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் வெளியிட்டு வருகின்றமையானது அப்பட்டமான சட்டவிரோத தேர்தல் மோசடி ஆகும்.

ஆகவே, உடனடியாக வேட்பாளர் அங்கஜன் இராமநாதனுக்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்ழுவைக் கோரிநிற்கின்றேன். அது தொடர்பான ஒலிப்பதிவு நாடா ஒன்றினையும் கையளிக்கின்றேன். – என்றுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.