முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை!

கிழக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற பாலர்பாடசாலை கல்விப் பணியகத்தின் கீழ்  கடமையாற்றுகின்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள நான்கு மாத கொடுப்பனவுகளை மிக விரைவாக வழங்கவேண்டும் அதேவேளை  ஒவ்வொரு மாதமும் முறையாக சம்பளத்தை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிழக்கு ஆளுநர் அனுராதா யகம்பத்க்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  இரா.துரைரெத்தினம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் ,”கிழக்கு மாகாணசபையைப் பொறுத்தவரையில் கல்வி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற கல்விப் பணியகமானது அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய 17 கல்வி வலயங்களைக் கொண்டு,  1681 பாலர் பாடசாலைகளையின் கீழ் 3780 ஆசிரியர்களையும், 46240 மாணவர்களையும், உள்ளடக்கி மிகவும் சிறப்பான முறையில் சேவையாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இதில் செயற்படுகின்ற ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் பல ஆண்டுகாலமாக தொண்டர்களாக சேவையாற்றி ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள் அனைவரும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகளை நம்பி காலை 7.30மணி தொடக்கம் மதியம் 12மணிவரையும் சேவை மனப்பாங்குடன் வறுமையின் உச்சத்தில் நின்று சேவையாற்றி வருகின்ற முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையை எந்த கல்விச் சமூகமும் பாராட்டாமல் இருந்து விட முடியாது.

இருபது வருடங்களுக்கு மேலாகவும் குறிப்பிட்ட கொடுப்பனவுடன், திருமணம் செய்து மூன்று நான்கு குழங்தைகளுக்கு தாயாகவும் மகிழ்ச்சியில் வாழ்க்கையை நடாத்தினாலும் ஆசிரியர் என்னும் பெயருடன் பொருளாதார விடயங்களில் மன உழைச்சலுடன் இவ் ஆசிரியர்கள் நடமாடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

போக்குவரத்திற்குக் கூட நிதி இல்லாமல் ஒருசில தேவைக்கு மட்டும் மாதாந்தக் கொடுப்பனவு 4000ரூபாவை நம்பி இருந்த ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக கொடுப்பனவு வழங்கப்படாமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும்

இவ் ஆசிரியர்களின் பொருளாதார சுமையைப் போக்குவதற்கும், இவர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவை அதிகரிக்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இத்தோடு  வழங்கப்படுகின்ற கொடுப்பனவை மாதம் மாதம் முறையாக

வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், நான்கு மாதாந்தக்  கொடுப்பனவுகளை  மிக விரைவாக வழங்கவும், மற்றும் இவர்களை ஆசிரியர் சேவையின் கீழ் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கொரனா வைரஸ் (கொவிட்-19) அடிப்படையில் இலங்கை வாழ் மக்களுக்கு வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட அரசு இவர்களின் வாழ்வாதாரத்தை சீர் செய்ய முடியாமல் மௌனமாக இருப்பதென்பது கல்விக்குச் சேவையாற்றுகின்ற ஆசிரியர்களை துன்பத்துக்கு உள்ளாக்குவதாகவே கருதவேண்டி உள்ளது.

இவ் முன்பள்ளி ஆசிரியர்களின் நான்கு மாதாந்தக் கொடுப்பனவுகள்  வழங்கப் படாமல் இருப்பதென்பது கிழக்கு மாகாணசபையின் பலவீனத்தை காட்டுகின்றது எனவே கிழக்கு மாகாண ஆளுனர் முன்பள்ளி ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு தொடர்பாக மிக விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.