வெலிக்கட சிறைச்சாலையில் மேலும் 294 கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை!

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிறைக் கைதி ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பினைப் பேணியதாக மேலும் 294 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த கைதிகள் இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேற்படி சம்பவம் தொடர்பாக நேற்று 315 சிறைக் கைதிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லையென்பது உறுதிசெய்யப்பட்டது.

இதனிடையே, வெலிக்கடை சிறைச்சாலையில் கொவிட்-19 தொற்றுறுதியான கைதி, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்திலிருந்து வெலிக்கடைக்கு அழைத்துவரும் வழியில், பொலன்னறுவை சிறைச்சாலையில் ஒருநாள் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக, பொலன்னறுவை சிறையில் உள்ள 11 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு வைரஸ் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் 40 பேர் கடந்த ஜூன் 27ஆம் திகதி வெலிக்கட சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதன்படி சம்பந்தப்பட்ட சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகள் ஆகியோருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.