பௌத்த பெரும்பான்மை அரசு வடக்கு கிழக்கை ஆக்கிரமிக்கும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளது – உதயகுமார்

பௌத்த மதத்திற்கும் முன்னுரிமை அளித்து ஏனைய இன மக்களினதும் அவர்களின் மதங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கும் அரசு வடக்கு கிழக்கையும் ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கிறது என மட்டக்களப்பில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரச கட்சியானது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை மேலும் அடக்கி ஒடுக்க நினைக்கின்றது.

இதன் ஒரு செயற்பாடுதான் அண்மையில் கிழக்கில் உருவாக்கப்பட்டுள்ள தொல்பொருள் ஆய்வுக்குப் பொறுப்பான ஜனாதிபதி ஆணைக்குழு இவ்வாணைக் குழுவில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இடம்பெறவில்லை பெரும்பான்மை இனத்தினை பிரதிபலிக்கின்ற பௌத்த மதம் சார்ந்த இராணுவ மயமாக்கப்பட்ட ஒரு ஆணைக்குழுவாகவேதான் இது காணப்படுகின்றது.

கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் புராதன பாரம்பரிய கலாசார மத அடையாளங்களை இல்லாமல் செய்து பெரும்பான்மை இன மக்களது பௌத்த மத அடையாளங்களை நிறுவுதற்கான ஒரு ஏற்பாடாக இந்த ஆணைக்குழுவின் செயற்பாடானது அமையக் கூடும்.

இதுவிடயமாக தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகமானது அண்மையில் வெல்லாவெளி பிரதேசத்தில் உள்ள வேத்துச்சேனை கிராமம், செங்கலடி பிரதேசத்தில் உள்ள குசனார் மலை முருகன் ஆலயம் ஆகிய இடங்களில் இடம்பெற்ற பிக்குகளின் அத்துமீறல்களை எடுத்துக் கொள்ளலாம்

மேலும் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஐநா மனித உரிமைப் பேரவையில் கொண்டுவரப்பட்ட நல்லிணக்க நீதிப் பொறிமுறையில் இருந்து இலங்கை தன்னிச்சையாக விலகியமை தமிழ் இளைஞர்கள் மீதான  மிருசுவில் படுகொலை செய்ததற்காக நீதி மன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை ஜனாதிபதி பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்தமை போண்ற விடயங்களானது இலங்கையில் தமிழ் மக்களுக்கான நீதி தொடர்ந்தும் மறுக்கப்படுவதனைக் காட்டுவதாக உள்ளது.

ஆயினும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவிர எதிர்ப்புக் காரணமாக தனது திட்டங்களை பூரணமாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசுக்கு முடியாமல் உள்ளதனால் த.தே.கூட்டமைப்பினை எப்படியாவது பலவீனப்படுத்த வேண்டும் என பல சூழ்ச்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது.

ஆயினும் அவை பயனளிக்கவில்லை. நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பின் ஆசனங்களை குறைக்கவேண்டும் என கூட்டமைப்பிற்கு எதிராக பல கட்சிகளையும் சுயேட்சைக் குழுக்களையும் உதிரிகளையும், ஒட்டுண்ணி நபர்களையும் இலங்கை அரசு களமிறக்கினாலும் அவையும் பயனளிக்கவில்லை.

என்னதான் பிராயத்தனங்களைச் செய்தாலும் தமிழ் மக்களிடம் இருந்து த.தே.கூட்டமைப்பினை யாராலும் பிரிக்கவே முடியாது இதுதான் உண்மை.

ஆகையால் நடைபெற இருக்கின்ற தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்துவார்கள் இதனூடாக வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.