யாழில் இராணுவ சீருடை மீட்பு – சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட செயலக உத்தியோகஸ்தர் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான உத்தியோகஸ்தர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மல்லாகத்தை சேர்ந்த ஒரு வன்முறை கும்பலை சேர்ந்த ஐந்து பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்தபோது, பிரதான சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீர்வேலி கரந்தன் பகுதியில் உள்ள வீடு ஒன்று சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வீட்டினுள் இருந்தும் வீட்டின் பின் பகுதியில் உள்ள வாழை தோட்டத்தில் இருந்தும் கைக்குண்டு ஒன்று, வாள்கள் மூன்று, மோட்டார் சைக்கிள்கள் இரண்டு, இராணுவச் சீருடைகள், தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் அவர்களை நேற்று பொலிஸார் யாழ்.நீதிமன்றில் முற்படுத்தியபோது, குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.