திருக்கோணேஸ்வரத்தை தாரைவார்க்க மாட்டோம்! சம்பந்தன் திட்டவட்டம்

தமிழர் தலைநகரமான திருகோணமலையையும் திருக்கோணேஸ்வரத்தையும் ஒருவருக்கும் தாரைவார்க்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

திருக்கோணேஸ்வரம் இந்துக்களின் புனித ஸ்தலம் என்றும் பாடல்பெற்ற தளங்களில் ஒன்று எனவும் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதற்கு பௌத்த மதத்தலைவர்கள் உரிமை கோரமுடியாது என்றும் தெரிவித்தார்.

கோணேஸ்வரம் ஆலயம் பற்றி வணக்கத்துக்குரிய எல்லாவல மேதானந்த தேரரின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலளித்த அவர், தேரரின் கருத்தை அடியோடு மறுப்பதாகவும் கூறியுள்ளார்.

தொல்பொருளை பாதுகாக்கின்றோம் என்ற பெயரில் தமிழர்களின் பூர்விக இடங்களையும் இந்துக்களின் புனித தலங்களையும் மாற்றியமைக்கும் நடவடிக்கையை ஜனாதிபதி செயலணி மேற்கொள்ள முடியாது என்றும் அதற்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

இனவாதம் மற்றும் மதவாதம் பரப்பும் செயற்பாட்டில் ஜனாதிபதி செயலணி செயற்படுமாக இருந்தால் அது நாட்டுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்