நாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் நாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருக்கிறது என இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
பொது ஒன்று கூடல்களுக்கான தடைகளைத் தளர்த்துதல், கட்டுப்பாடுகளற்ற பொதுப்போக்குவரத்து சேவை நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல நடவடிக்கைகள், ஏற்கனவே பின்பற்றப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கைவிடலாம் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டன என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்தகால சம்பவங்களிலிருந்து தெளிவான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ள இலங்கை மருத்துவ சங்கம் ‘புதிய இயல்புநிலை’ வாழ்க்கை தொடர்பான பிரசாரங்களை அரசாங்கம் வலுப்படுத்துவதோடு, சுகாதாரத்துறை அதிகாரிகளால் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகளைப் பொதுமக்கள் கட்டாயமாகப் பின்பற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்ப கட்டத்தில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தமையின் ஊடாக வைரஸ் பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் காணப்படுகின்றது.
இது குறித்து நாம் பெருமையடைய முடிந்தாலும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளில் குறைபாடுகள் உள்ள தற்போதைய சூழ்நிலை குறித்து நாம் விசனமடைந்திருக்கின்றோம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்படாததோடு, முறையான கண்காணிப்பின்மையினால் மீண்டும் நாடு கொரோனா வைரஸ் தொற்றுப்பரவல் நிலைக்குள் தள்ளப்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கருதுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை