கேப்பாப்பிலவு மக்களை மீண்டும் காணிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிப்பு
2017 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியிலிருந்து, பொது மக்களை மீண்டும் வெளியேறுமாறு, கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ஊடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- கேப்பாப்பிலவு, சூரிபுரம் பகுதியில் 1990 ஆண்டில் இருந்து மக்களினால் குடியிருப்பாகவும் விவசாய நிலமாகவும் பயன்படுத்தப்பட்டுவந்த சுமார் 50 ஏக்கர் காணியில் இருந்த மக்களையே தற்போது அங்கிருந்து வெளியேறுமாறு கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இவ்வாறு 19 இற்கும் மேற்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஒவ்வோருவருக்கும் சுமார் இரண்டு ஏக்கர் காணிகள் காணப்படுவதோடு, பல ஆண்டுகளுக்கு முன்னர் நடப்பட்ட தென்னைமரங்கள், நிலக்கடலைச்செடிகள், மரமுந்திரிகை உள்ளிட்ட பயன் தரும் தாவரங்களும் குறித்த காணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 12 கிணறுகளும் குறித்த காணியில் காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவக்கட்டுப்பாட்டில் இருந்த இந்தக்காணிகளை விடுவிக்கக் கோரி, மக்கள் போராட்டம் நடத்தி 2017 ஆம் ஆண்டில் இந்தக்காணிகள் இராணுவத்தால் விடுவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அடுத்தமாதம் 12 ஆம் திகதிக்கு முன்னர் இந்தக் காணிகளில் இருந்து மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கான நில அளவை நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு நில அளவைத்திணைக்களத்தினர் நேற்றைய தினம் வருகைதந்திருந்ததோடு, பாதிக்கப்பட்ட மக்கள், ஒன்று கூடியிருந்தமையினை அடுத்து தமது நில அளவை நடவடிக்கையை மேற்கொள்ளாது சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை