இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்தி வந்தவர் தலைமறைவு: சந்தேகநபரை தேடி அதிரடிப்படையினர் வலைவீச்சு
இந்தியாவிலிருந்து கஞ்சா போதைப்பொருளை கடத்தி வந்த சந்தேகநபர் உடுத்துறையில் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் அவரை தேடும் நடவடிக்கையில் அதிரடிப்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.
வடமராட்சியைச் சேர்ந்த படகு உரிமையாளரே இவ்வாறு அதிரடிப்படையினரால் தேடப்பட்டு வருகின்றார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமராட்சி- உடுத்துறை கடற்கரையில் இன்று (சனிக்கிழமை) காலை கஞ்சா பொதிகள் இரண்டு, கடற்படையினரால் மீட்கப்பட்டன. ஆனால் இதனைக் கடத்தி வந்தவர்கள் எவரும் காணப்படவில்லை.
மேலும் பொதிகளை இந்தியாவிலிருந்து எடுத்து வந்த படகையும் படையினர் கைப்பற்றியுள்ளனர். எனினும் படகின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார்.
கடற்படையினரால் மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் இரண்டிலும், 50 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் இருந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கிருந்து கஞ்சா பொதியை யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வருவோரால் குறித்த தொற்று இங்கும் பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே படகு உரிமையாளரைக் கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை என சிறப்பு அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை