சி.வி.யின் கட்சியை வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்- சிவமோகன்
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையத்தின் விவகாரத்துக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க தவறிய சி.வி.விக்னேஸ்வரனின் கட்சியை வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்குமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரான சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் சி.சிவமோகன் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் தொல்பொருள் திணைக்களம் ஒட்டுமொத்தமாக இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் எமது பகுதிகள் அனைத்தும் பௌத்தர்களின் பிரதேசம் என பிரகடனப்படுத்தும் அளவிற்கு அவர்கள் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட தமிழ் மக்களுக்கு செய்தது துரோகமே. எம்மை உடைப்பதற்கு ஆரம்ப புள்ளியாக அவரை பாவிக்க முற்பட்டுள்ளனர். ஆனால் வன்னி நிலப்பரப்பில் அவருக்கான எந்த இடமும் இல்லை.
மேலும் வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் எவ்வளவு தூரம் இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் அவரது கையில் விடப்பட்டப்போது சரியான தீர்வை முன்வைக்கவில்லை. எனவே சி.வி.யின் கட்சியை இந்த வன்னி நிலம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் என்பதனை நான் ஆணித்தரமாக சொல்லுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை