பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சியையே நாம் கேட்கின்றோம் – சம்பந்தன்

பல நாடுகளில் பின்பற்றப்படும் சமத்துவமான ஆட்சி முறைகளையே தாங்கள் கேட்கின்றோம் என்றும் அதனை யாரும் மறுக்கமுடியும் என தான் நினைக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த சம்பந்தன், “எமது நாட்டில் 70வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினை இருக்கின்றது. ஒரு அரசியல் தீர்வு சம்பந்தமான பிரச்சினை என்பது மிக இலகுவான பிரச்சினையல்ல, மிகவும் கடினமான பிரச்சினையாகும்.

புதிய நாடாளுமன்றம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது எங்களுக்குத் தெரியாது. அதை எதிர்பார்த்து நாங்கள் எங்களை தயார்படுத்த வேண்டும். என்னைப்பொறுத்தவரையில் நாம் அநீதியாக எதையும் கேட்கவில்லை. எமது உரிமைகளையே நாம் கேட்கின்றோம்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட மதம், கலாசாரத்தினைக்கொண்ட ஒரு இனம். விசேடமாக தமிழ் மக்கள் சொந்தக்கலாசாரம், எங்களுக்கென கலாசாரம், பண்பாடு, பாரம்பரியம், மொழி, சமயம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு தேசிய இனமாவோம். அவ்விதமான இனத்திற்கு சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தன்னுடைய கருமங்களை தானே கண்காணித்துக்கொள்கின்ற தான் சரித்திர ரீதியாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் பெரும்பான்மை இனமாக வாழ்ந்துவந்த வாழ்ந்துகொண்டிருக்கின்ற பிரதேசங்களில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரிமையுண்டு.

அந்த அடிப்படையில்தான் பல நாடுகளில் சமத்துவத்தின் அடிப்படையில் சமாந்தரமாக வாழ்கின்றோர் மத்தியில் ஆட்சி முறையே பல நாடுகளில் பின்பற்றப்படுகின்றது. இதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். அதை எங்களுக்கு மறுக்க முடியுமென நான் நினைக்கவில்லை. இன்று சர்வதேச ரீதியாக விஷேடமாக இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமென்ற கருத்தை மிகவும் உறுதியாக முன்வைத்து வருகின்றார்கள்.

ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் அடிப்படையில் எங்களது சம்மதம் இல்லாமல் நாங்கள் ஆட்சிசெய்யப்படுகின்றோம். 1956ஆம் ஆண்டு தொடக்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமுறையை மாற்றியமைக்கவேண்டும் என்று தமது ஜனநாயக முடிவுகள் மூலமாக தீர்ப்பளித்துள்ளனர். அது அமுல்படுத்தப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.