அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – கஃபே

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது ஒவ்வொரு பெண்ணினதும் பொறுப்பு என கஃபே அமைப்பின் பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு குறித்த பயிற்சிப்பட்டறையில் இன்று  (செவ்வாய்க்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், ”இம்முறை வேட்பாளர் பட்டியல்களை தயாரித்தபோது அனைத்து அரசியல் கட்சிகளும் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு குறிப்பிடத்தக்களவு வாய்ப்பை வழங்கவில்லையென சுட்டிக்காட்டினார். இதன் விளைவாக, இத்தேர்தலில் 7458 வேட்பாளர்களில், 819 பேர் மட்டுமே பெண்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெண்கள் மீது எந்தளவு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்பதை இந்த விடயம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதென சுரங்கி ஆரியவன்ச இதன்போது சுட்டிக்காட்டினார். நாட்டின் அனைத்து பிரதான அரசியல் கட்சிகளின் முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக தற்போதைய அரசியல் அரங்கில் பெண்களுக்கு பொருத்தமான இடம் வழங்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தயாரித்தபோது அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் பகிரங்கமாக இதுதொடர்பாக வேண்டுகோள் விடுத்ததாக குறிப்பிட்ட சுரங்கி ஆரியவன்ச, எனினும், அந்தக் கோரிக்கைகளை கருத்திற்கொள்ளவில்லை என்பது வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலிலிருந்து தெளிவாகிறது என சுட்டிக்காட்டினார்.

எனவே, தற்போது போட்டியிடும் 819 பெண் வேட்பாளர்களில் கணிசமான எண்ணிக்கையைத் தேர்ந்தெடுப்பது இலங்கையில் பெரும்பான்மையான வாக்காளர்களாக காணப்படும் பெண்களின் பொறுப்பாகும். வேட்பாளர் பட்டியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்திற்கு குறிப்பிடத்தக்க இடம் வழங்கப்படவில்லை என்றாலும், வாய்ப்பளிக்கப்பட்ட பெண்களை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுப்பதில் குறிப்பாக பெண் வாக்காளர்கள் கவனஞ்செலுத்த வேண்டுமென” மேலும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.