தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் – மஹிந்த
தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் பொலிஸார் மாத்திரமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் ஆணை குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
இதில், உதவி தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு அரசாங்க அதிபர் மேலதிக அரசாங்க அதிபர்கள் மற்றும் யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உட்பட்ட அதிகாரிகளுடன் எதிர்வரும் தேர்தலை சுயாதீனமாக நடாத்துவதற்கான சந்திப்பினை மேற்கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது வடக்கில் சிலதேர்தல் விதிமுறை மீறல்கள் அதிகமாக இடம் பெறுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது அதாவது வீதிகளில் வேட்பாளர்களின் இலக்கங்கள் மற்றும் சின்னங்கள் எழுதப்படுவது அவதானிக்க கூடியதாக இருக்கின்றது இவை நிறுத்தப்பட வேண்டியது.
அத்தோடு இங்கே அரசாங்க நிதியில் அமைக்கப்படும் வீதிகள் சில வேட்பாளர்களினால் திறப்பு விழாக்கள் செய்யப்பட்டு திறக்கப்படுகின்றன அதனை உடனடியாக நிறுத்தும்படி நான் உத்தரவு பிறப்பித்திருக்கின்றேன் அத்தோடு தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிப்பது தொடர்பாக நாம் ஆணைக்குழுவில் ஆராய்ந்து வருகின்றோம் அது தொடர்பில் விரைவில் அந்த அறிவித்தல் வரும்.
அதே போல வீடுகளில் சுய தனிமைப் படுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள் தேர்தல் தினத்தன்று மாலை 4 தொடக்கம் 5 மணி வரை வாக்களிப்பு நிலையம் சென்று வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும்.
அண்மையில் ஒரு வேட்பாளர் 75 கள்ள வோட்டு போட்டது தொடர்பில் பொது இடத்தில் பேசியிருக்கிறார் இது தொடர்பில் எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது அது தொடர்பில் ஆணைக்குழுவில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்தல் கடமைகளில் போலீசார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் ராணுவத்தினர் எக்காரணத்திற்காகவும் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் அதாவது எமக்கு ஒரே ஒரு விடயத்திற்கு தான் இராணுவத்தினரை உதவி தேவைப்படுகின்றது அதாவது தீவுப் பகுதிகளில் இருந்து விரைவாக வாக்குப் பெட்டிகளை வாக்கு சேகரிப்பு நிலையத்திற்கு எடுத்து வருவதற்கு விமானப்படை மற்றும் கடற்படையினரின் உதவி தேவையாக உள்ளது எனவே வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையத்திற்கு எடுத்துசெல்லும் பணியில் மட்டும் இராணுவத்தினர் பயன்படுத்தபடுவார்கள் தேர்தல் கடமைகள் அனைத்திலும் போலீசார் மாத்திரமே கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அத்தோடு தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பில் ஒருவரை கைது செய்யும் அதிகாரம் போலீசாருக்கு மாத்திரமே உள்ளது அதனை வேறு எவரும் மேற்கொள்ள முடியாது ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை