ரணிலின் குற்றச்சாட்டுக்கு சுகாதார அமைச்சர் பதில்
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு ஒரு ரூபாய் கூட பணம் கிடைக்கவில்லை என பலமுறை கூறிவிட்டோம். ஆனால் ரணில் மீண்டும் இது தொடர்பாகவே எம்மிடம் கேள்வி எழுப்புகிறார் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட காணொளியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பவித்ரா வன்னியாராச்சி மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சரியான முறையில் கேள்விக் கேட்க கற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களில் அவர், உலக சுகாதார ஸ்தாபத்தினால் 4200 கோடி ரூபாய் நிதி இலங்கைக்கு கிடைத்ததாக பெரிய பொய் ஒன்றைக் கூறியிருந்தார். அப்போதே நான் அவருக்கு இதற்கான பதிலை வழங்கியிருந்தேன்.
அதாவது, எமக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் 2 மில்லியன் டொலர் மட்டுமே கிடைத்தாக தெரிவித்திருந்தேன். உலக சுகாதார ஸ்தாபனமும் உலக வங்கியும் வேறுபட்டவை என்பதையும் அவரிடம் கூறவேண்டும்.
உலக வங்கியிடமிருந்து 128 மில்லியன் டொலர் எமக்கு கிடைத்துள்ளது. இது மூன்று வருட தவணையாகவே எமக்கு வழங்கப்படவுள்ளது.
அந்தவகையில் இவ்வருடத்திற்காக 22 மில்லியன் டொலர் மட்டுமே கிடைத்துள்ளது. அத்தோடு, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்கு பணம் கிடைத்ததாகவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
ஆனால், அந்த ஒன்றியத்திடமிருந்து எமக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்கவில்லை என்பதை நாம் கூறிக்கொள்கிறோம்.
இதனை நாமும் பல தடவைகள் அவரிடம் கூறிவிட்டோம். எனினும், அவர் மீண்டும் மீண்டும் என்னிடம் இதுதொடர்பாக கேள்வி எழுப்பி வருகிறார்.
இனியும் அவருக்கு நான் பதில் வழங்கி, எனது நேரத்தை விரயமாக்கப் போவதில்லை” என குறிப்பிட்டுள்ளார்
கருத்துக்களேதுமில்லை