மட்டக்களப்பில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பெருமளவு போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரித்திணைக்களம் தெரிவித்தது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தினால் சட்ட விரோத போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக மதுவரித்திணைக்கள பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் இந்த முற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டன.

கசிப்பு உற்பத்தி மேற்கொண்டது தொடர்பில் 03 பேரும் கசிப்பு வைத்திருந்தவர்கள் 23 பேரும் கசிப்பு உற்பத்திக்கான கோடாவினை வைத்திருந்த 02 பேரும் சட்ட விரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட 03 பேரும் சட்ட விரோதமாக கள்ளு விற்பனையில் ஈடுபட்ட 03 பேரும் கசிப்பு காய்ச்சுவதற்கான உபகரணங்கள் வைத்திருந்த 01 வருமாக சுமார் 35 பேர் கைதுசெய்யப்பட்டதுடன் பெருமளவு கசிப்பு உட்பட பெருமளவான போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்களத்தின் பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.