சுதந்திரக் கட்சியின் தலைவராக மீண்டும் பிரதமர் மஹிந்த?
பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை ஏற்றுக்கொள்வார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கட்சியின் தற்போதைய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் நேற்று இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் கட்சி ஆதரவாளர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், மறுக்கமுடியாத மற்றும் மிகவும் பொருத்தமான அரசியல்வாதியாக இருக்கும் பிரதமர் ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியை வலுவான அரசியல் கட்சியாக புத்துயிர் பெறச்செய்ய தலைமையை ஏற்கவேண்டும் என்றும் கூறினார்.
1952 இல் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து அவரைப் போன்ற வலுவான தலைவர்களால் கட்சி வழிநடத்தப்படுகிறது என்றும் எனவே மீண்டும் ஒரு முறை சுதந்திரக் கட்சியின் தலைவராவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆசீர்வாதமும் ஒத்துழைப்பும் அவருக்கு உண்டு என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை கட்சியின் நிர்வாக மற்றும் செயற்குழுக்கள், அரசியல் தலைவர்கள் மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர்களுடனான கலந்தாலோசனையின் பின்னரே அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை