ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது: ஜனக நந்தகுமார

வவுனியா நிருபர்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய நல்ல அறிவு இருக்கின்றது. இதனால் வன்னி மக்கள் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பொதுஜன பெரமுனவை பலப்படுத்த வேண்டும் என அதன் வேட்பாளர் ஜனக நந்தகுமார தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மாவட்டத்திற்கு 11 மாதங்களுக்கு முன்னரே வந்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருக்கு அணுசரணை வழங்குவதற்காகவே வந்தேன். எனக்கு பசில் ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ ஆகியோர் வன்னி மாவட்டத்தை பொறுப்பாக தந்தார்கள். வன்னியில் மக்களுக்கு பாரிய பிரச்சனைகள் இருக்கின்றது. இங்குள்ள மக்கள் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் இங்கு ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி எல்லோருடனும் இணைந்து செயற்படுகின்றோம். அதனை மக்கள் நன்றாக விளங்கி வைத்துள்ளார்கள். ஜனாதிபதியினுடைய மாபெரும் வெற்றிக்கு பின்னர் இங்குள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விளங்கிக் கொண்டுள்ளார்கள்.

கொரோனா காரணமாக உலகின் பல நாடுகள் அழிவைச் சந்தித்திருந்த போதும் இலங்கை ஜனாதிபதியின் சிறந்த தலைமைத்துவத்தால் தான் இதனை கட்டுப்படுத்த முடிந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பே சொல்கின்றது. கடந்த தேர்தல் காலங்களில் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பலர் இங்கு கவலைப்படுகிறார்கள். தற்போது கிராமங்களில் எமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நான் கடந்த காலங்களில் இன, மத பேதமின்றி மக்களுக்கு பணியாற்றியதால் எனக்கு மக்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள். இதனால் இம்முறை மாபெரும் வெற்றியை வன்னியில் பெறுவோம். எங்களுக்கு 3 ஆசனங்கள் இங்கு கிடைக்கும்.

தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் வெளிப்படையாகவே எமக்கு தெரிகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற இடங்களில் இருக்கும் மக்களின் பாரிய ஒத்துழைப்பு பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்திருக்கின்றது. தினமும் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சந்திக்கிறார்கள். பலர் எம்முடன் இணைந்து வேலை செய்கிறார்கள். அரசாங்கத்துடன் இணைந்த கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

ஜனாதிபதியாக கோட்டபாய அவர்கள் பதவியேற்ற பின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எந்த பயமும் இல்லாமல் மக்கள் தற்போது வாழ்வதற்கு ஜனாதிபதி கோட்பாய அவர்களே காரணம். பாதாள உலக குழுவினர் கடந்த காலங்களில் மக்களை பயமுறுத்தி கப்பம் பெற்றனர். அப்படியொரு நிலமை தற்போது இல்லை. வன்னி மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல், கஞ்சா பாவனை, குடு பாவனை இருந்தால் எமக்கு தெரியப்படுத்தவும். பாதுகாப்பு பிரிவினரும், பொலிசாரும், புலனாய்வு துறையினரும் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள். கடந்த வருடம் சஹ்ரான் போன்றவர்கள் உருவாகி  பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தினார்கள். இனி அப்படி  ஒன்றும் நடக்காது.  ஏனெனில் இந்த நாட்டுக்கு நல்ல தலைவர் இருக்கின்றார். பாதுகாப்பு, அபிவிருத்தி பற்றி அவருக்கு நல்ல அறிவு இருக்கின்றது. எனவே அவருடைய கரங்களை பலப்படுத்த வன்னி மக்களும் பொதுஜன பெரமுனவுடன் கை கோர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.