பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகள் உருவாகுவதற்கு வெளிநாட்டு சக்திகளே காரணம் – நாமல்!
மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
குருநாகலில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மறைமுக வெளிநாட்டு நிகழ்ச்சி நிரலை கொண்ட சக்திகள் நம்பகதன்மையற்ற அரசியல் தலைவர்களை ஆதரிக்கின்றன. அவ்வாறான தலைவர்கள் தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என அந்த சக்திகள் கருதுகின்றன.
நாட்டில் சமூகங்களின் மத்தியில் கருத்துவேறுபாடு இல்லை என தெரிவித்துள்ள அவர் சமூகங்கள் மத்தியில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு அரசியல் நோக்கங்களே காரணம் என தெரிவித்துள்ளார்.
மாவனல்லையில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்டவேளை முஸ்லீம் இளைஞர் ஒருவரே அது குறித்து முதலில் தகவலை தெரியப்படுத்தினார். சமூகங்கள் மத்தியில் கருத்துவேறுபாடோ அல்லது பதற்றமோ இல்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
தமிழ் முஸ்லீம் சமூகத்தினர் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவின் நடவடிக்கைள் குறித்த பிரசாரத்தின் மூலம் தவறான கருத்து உருவாக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரானவர் என்ற தோற்றத்தை வெளிநாடுகளே உருவாக்கின. அவர்கள் தங்கள் நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுக்கவும் நாட்டை பலவீனப்படுத்தவும் இதனை செய்தனர்.
மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்ட அரசியல் கட்சிகளை ஆரம்பித்ததன் மூலம் மகிந்தராஜபக்ஷவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகள் ஆரம்பமாகின.
இவ்வாறான அரசியல் கட்சிகளை நாட்டை பலவீனப்படுத்தும் நோக்கம் கொண்ட வெளிநாட்டு சக்திகள் கட்டுப்படுத்துகின்றன. இன்று நாடுகளின் பொருளாதாரம், கலாச்சாரம் மதம் ஆகியவற்றை அழித்த பின்னர் அவற்றை கைப்பற்றும்போக்கினை அவதானிக்கின்றோம்.
லிபியாவில் இதுவே இடம்பெற்றது. 2015 இற்கு முன்னர் அதேசக்திகள் இலங்கையிலும் இதனை செய்து தங்கள் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க முயன்றன.
2009 இல் அனைத்து சக்திகளும் இணைந்து விடுதலைப்புலிகளை தோற்கடித்தன. விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர் பயங்கரவாத அமைப்புகள் நாட்டை பல்வேறு வழிகளில் பலவீனப்படுத்த முயன்றன.
அந்த சக்திகள் 2012இல் தீவிரவாதத்தை பரப்பின இதன் காரணமாக மகிந்த ராஜபக்ஷ 2015 தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். இலங்கையில் பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்குவதற்கு நேரடி காரணம் வெளிநாட்டு சக்திகளே“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை