தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி குறித்த அறிவிப்பு வெளியானது!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தபால்மூலம் வாக்களிப்பதற்கான திகதி குறித்த அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி பொது தேர்தலை நடத்த அர்பணிப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அதற்குள் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் அரசாங்கத்திற்கு பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.
குறிப்பாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளை குறைந்தது ஒருவாரத்திற்கேனும் ஒத்திவைக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவிடம் குறித்த தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
அத்துடன் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் அடங்கிய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த வர்த்தமானி எதிர்வரும் சில தினங்களில் வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக 16 மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை