வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல் வீரவன்ச!

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 200 ஏக்கர் காணியை பனை அபிவிருத்தி சபையினூடாக வடக்கு பனை விவசாயிகளுக்கு வழங்கும் ஒப்பந்தம் அமைச்சர் விமல் வீரவன்ச முன்னிலையில் நேற்று(புதன்கிழமை) கைச்சாத்திடப்பட்டது.

இந்த நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அமைச்சர் விமல் வீரவங்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘வடக்கில் வாழும் தமிழ் மக்கள் முகங்கொடுத்துள்ள காணிப் பிரச்சினைக்கு இராணுவ முகாங்களை அகற்றுவது தான் ஒரே தீர்வு என்று தமிழ் இனவாத அரசியில்வாதிகள் பரப்பிவரும் கட்டுக்கதைக்கு பதில் வழங்க முன்வந்திருக்கிறோம்.

மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்குரிய மன்னார் 200 ஏக்கர் காணியை ஒப்பந்தம் வாயிலாக வடக்கிலுள்ள பனை பயிர் செய்கையாளர்களின் சங்கங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். தமிழ் அரசியல்வாதிகளின் கட்டுக்கதைகளுக்கு இதனூடாக நடைமுறைச்சாத்தியமான பதில் கிடைக்கும்.

முதற்கட்டமாக 200 ஏக்கர் காணி விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மேலும் 6000 ஏக்கர் காணியை வடக்கு விவசாயிகளுக்கு எள், பாசிப்பயறு கௌப்பி வெங்காயம், பயிரிடுவதற்காக வழங்க எதிர்பார்க்கிறோம்.

இறக்குமதியில் தங்கியுள்ள மஞ்சள், உளுந்து பயிற்செய்கையில் ஈடுபட வடக்கு விவசாயிகளை ஊக்குவித்தால் அவர்களின் உற்பத்திக்கு உயர்ந்த கேள்வி ஏற்படும். வடக்கி கிழக்கிலுள்ள அதிகமான மக்கள் விவசாயம் பனை கைத்தொழில் சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயத்திற்கு காணி இல்லாமை அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினையாகும். இந்த பிரச்சினையை சாதகமாக பயன்படுத்தி வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.