அனுமதியில்லாத கட்டுமானங்களை நிறுத்துவதற்கு மன்னார் நகரசபை அமர்வில் தீர்மானம்!
மன்னார், பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் மன்னார் நகர சபையின் அனுமதியின்றி மேலதிகமான மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை உடனடியாக அகற்றுமாறு மன்னார் நகர சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் நகர சபையின் 29ஆவது அமர்வு இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் நகர சபையின் முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபை உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக மன்னார் பஸார் பகுதியில் மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் மேலதிகமாக குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கழிவு நீர் வடிகான்களுக்கு மேற்பகுதியிலும் கட்டுமானப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
ஆனால், மன்னார் நகர சபைப் பிரிவில் உள்ள வீடுகளுக்கு சுற்று மதில் அமைப்பதானாலும் மன்னார் நகர சபையின் அனுமதியைப் பெற்று சுற்று மதில் அமைக்க வேண்டும்.
எனவே, தற்போது இடம்பெறும் கட்டுமானப் பணிகளை நிறுத்துவதற்கு உடனடியாக மன்னார் நகர சபை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சபை உறுப்பினர்களான மைக்கல் கொலின் மற்றும் ஜோசப் தர்மன் ஆகியோர் கோரிக்கை முன்வைத்தனர். இதன்போது சபை உறுப்பினர்கள் முழு ஆதரவை வழங்கினர்.
இந்நிலையில், வரும் 14 நாட்களுக்குள் மேலதிகமாக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளை குறித்த வர்த்தக நிலையங்களை நடத்துபவர்கள் அகற்ற வேண்டும் எனவும் அல்லாதுவிடின் நகர சபை குறித்த கட்டுமான பணிகளை அகற்றும் என்றும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மன்னார் பஸார் பகுதியில் மரக்கறி விற்பனை நிலையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தனி நபர்கள் பஸார் பகுதியில் மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள சபையில் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், மன்னார் நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ளக வீதி புனரமைப்பு, நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துதல், நகர சபைப் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, சிரமதான பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இதனைவிட, மன்னார் நகர சபையிடம் கையளிக்கப்பட்ட மன்னார் புதிய பேருந்துத் தரிப்பிடத்தை எதிர்வரும் 25ஆம் திகதி மக்களின் பாவனைக்காக கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை