பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் – ரொஷான் ரணசிங்க

பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பொலநறுவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 2015ம் ஆண்டு அரசியல் ரீதியில் ஏற்படுத்திய மாற்றங்களினால் பொதுஜன பெரமுனவை தனித்து உருவாக்கினோம்.

இரண்டு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடுக்கும் விதத்தில் பொதுஜன பெரமுன மக்களாணையினை 2018ம் ஆண்டு தொடக்கம் பெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் எமது வெற்றி மேலும் பலமானது.

சுதந்திர கட்சியினால்தான் பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றது என்று சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்வது  தவறானதாகும்.

சுதந்திர கட்சியினரது ஆதரவு இல்லாமல் 2018ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றோம். ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என்பதை பெரும்பாலான மக்கள் பிரதான கோரிக்கையாக முன்வைத்தார்கள்..

சுதந்திர கட்சியை நம்பி  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  பொதுத்தேர்தலில் களமிறங்கவில்லை. இரு தரப்பினரும் கூட்டணியமைத்திருந்தாலும் கொள்கை ரீதியில் வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.

பொதுத்தேர்தலுக்கான போட்டிகள் தனித்தே காணப்படும். மொட்டு சின்னத்தின் உறுப்பினர்களை நாடாளுமன்றத்திற்கு அதிகமாக  உள்வாங்குவதே எமது பிரதான எதிர்பார்ப்பு

பொதுத்தேர்தலுக்கு பின்னர் சுதந்திர கட்சியின் தலைமைத்துவப்  பொறுப்பினை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோது ஏற்க மாட்டார்.  பொதுஜன பெரமுனவே புதிய அரசாங்கத்தில் பலமான ஆட்சியை அமைக்கும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கைத்திட்டங்களை   நிறைவேற்ற பொது ஜன பெரமுன தனித்து அரசாங்கத்தை அமைக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.