புலி ஆண்ட இந்த மண்ணை கூட்டமைப்பே ஆளவேண்டும்! ஜனநாயகப் போராளிகள்

தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும். புலி ஆட்சி செய்த இந்த மண்ணிலே வேறு எதுவும் ஆட்சி செய்ய முடியாது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்தார்.

இன்று (18) மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நடைபெற்றுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக இது இருக்கின்றது. ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரதிநிதிகளும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடிய முன்னாள் போராளிகளும் ஒன்றிணைந்து தேர்தல்களத்தில் பணியாற்றுகின்றோம்.

உண்மையில் துரோகங்கள் சூழந்து நிற்க, அந்தத் துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்க இந்தக் களத்திற்குள்ளே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலை நிமர்த்திக் கொண்டு தமிழர்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்வது மிகமிக வரவேற்கத்தக்க விடயம். நாங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கின்றோம். எதிர்காலத்தில் எமது இனம் சார்ந்த உரிமை தொடர்பில் எவ்வாறு எங்களுடைய கட்டமைப்புகளைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவிற்கு நாங்கள் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் மிகப் பெரும் சக்தியாக இந்த இலங்கைப் பாராளுமன்றத்திலே செயற்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகத்தான் தமிழ் மக்களின் அரசியற் பலத்தை எமது தாயகத்தில் நாங்கள் நிறுவிக் கொள்ள முடியும்.

தமிழீழத் தலைவரின் தீர்க்க தரிசனத்தால் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இலங்கைப் பாhளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்களை அனுப்பி வைத்தார். அவரின் சிந்தனையின் பிரகாரம் அவர் எடுத்த அந்தத் தீர்மானம் இன்று எமக்குப் பெரும் சக்தியாக இருக்கின்றது.

பல துரோகங்கள் பற்பல சவால்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அபிவிருத்தி என்ற மாயையை இங்கு கொண்டு வந்து எமது மக்களை உரிமை சார்ந்த விடயத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்காகப் பல சதித் திட்டங்களைத் தீட்டி வருகின்றார்கள். எமது மக்கள் ஒவ்வொரு போராளிகளையும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து எமது போராட்டத்திற்கு அனுப்பும் போது அவர்கள் வாழ்வாதாரத்தையோ, அபிவிருத்தியையோ, வேலைவாய்ப்பையோ எதிர்பார்த்து அனுப்பவில்லை. நிரந்தரமாக எமது மக்கள் இந்த மண்ணில் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காகவே தங்களின் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினர். அந்த உணர்வு ரீதியான எமது மக்களை அபிவிருத்தியைக் காட்டி திசை திருப்பி தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் எண்ணம் கொண்ட மாற்று அணியினை முற்றுமுழுதாக நாங்கள் அழிக்க வேண்டும்.

புலி ஆட்சி செய்த இந்த மண்ணிலே வேறு எதுவும் ஆட்சி செய்ய முடியாது. நாங்கள் கோளைகள் அல்ல. எமது உரிமையை நாங்கள் எந்தவிதத்தில் வென்றெடுக்க முடியுமோ அந்த வழியில் தான் நாங்கள் செல்கின்றோம். எமது தலைவர் சொல்லியுள்ளார் போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் கொள்கை மாறாது. எமது கொள்கையின் அடிப்படையில் நாங்கள் எங்கள் போராட்டத்தை ஆரம்பித்தோம். தற்போது அதனை ஜனநாயக வழியில் பெற்றுக் கொள்வதற்காகப் போராடுகின்றோம்.

எதிர்காலத்திலே தமிழர்களின் ஐக்கியம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாகவே உருவாக்கப்பட வேண்டும். எமக்கு வீதியா முக்கியம் அல்லது எமது இனத்தின் மானமா முக்கியம் என்பதை எமது மக்களே தீர்னிக்க வேண்டும். அதற்காக அபிவிருத்தி தேவையில்லை என்ற விடயத்தை முன்வைக்கவில்லை. நாங்களும் அபிவிருத்தி செய்வோம். ஆனால் இங்கு என்ன நடக்கப் போகின்றது. எமக்குப் பாதுகாப்பு இல்லாமல் போகப் போகின்றது. அப்படியான சூழல் இங்கு உருவாக்கப்பட்டு விட்டது. தொடர்ச்சியாக இந்த மண்ணில் நாங்கள் அழிய முடியாது, வெளிநாடுகளுக்கும் ஓட முடியாது. இது எங்கள் சொந்த மண் இந்த மண்ணில் நாங்கள் வாழ வேண்டும்.

இன்று இந்த ஜனநாயக வழிப் போhட்டத்தை பேராளிகளும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து முன்னெடுக்கின்றது. இதனைப் பயங்கரவாதம் என்று முத்திரை குத்த முடியாது. ஏனெனில் உலகம் அதனை ஏற்கத் தயாரில்லை. உலகம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. நாங்கள் சரியான முறையில் எமது ஒற்றுமையை நிலைநிறுத்திக் காட்டுவோமாக இருந்தால் சர்வதேசம் எமக்குப் பின்னால் நிற்கும். அது நிச்சயம் கைகொடுக்கம், நாங்கள் வெற்றி பெறுவோம்.

எங்களுடைய இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வெற்றி. எமக்குத் தலைவர் தந்துவிட்டுச் சென்றுள்ள கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தமிழீழத் தேசியத் தலைவரையும், தமிழீழத்தையும் நேசிக்கின்ற ஒவ்வொரு தமிழ் மகனும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்ற தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.