தற்கொலை குண்டுதாரியான சாரா தப்பியமைக்கு பொலிஸ் உப பரிசோதகரே காரணம்- சி.ஐ.டி

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான புலஸ்தினி (சாரா) தப்பித்தமைக்கு பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர் காரணமென நிரந்தர சாட்சி ஒன்றின் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையிலேயே சந்தேகநபரான உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கரை, அக்கரைப்பற்றிலுள்ள அவரது வீட்டில்வைத்து, கடந்த 13ஆம் திகதி அதிகாலை 5 மணியளவில் சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதலில் சாரா என்ற குண்டுதாரி உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட போதிலும், அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

அதாவது குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட குண்டுத்தாரிகளின் மரபணுக்களில் சாராவின் தாயாரின் மரபணு எதிலும் பொருந்தவில்லை

இந்நிலையில் புலனாய்வு பிரிவினர் முதற்கட்டமாக சாராவின் ஊரான மட்டக்களப்பு மாங்காடு பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, அவர்களுக்கு ஒரு தகவல் கிடைத்தது.

அதில் சாரா உயிருடன் இருப்பதுடன் புலனாய்வு துறையினரை ஏமாற்றி தப்பியுள்ளார் என தெரியவந்த நிலையில், அந்த பகுதியில் 3 வீடுகளில் மாறிமாறி தங்கவைக்கப்பட்டதான நிரந்தர சாட்சி ஒன்றின் மூலம் தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை முஸ்லிம் இளைஞர் ஒருவர் தனது மகளை முஸ்லீம் மதத்திற்கு மதமாற்றம் செய்ய முற்படுவதாக சாராவின் தாயார் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யசென்ற போது, அங்கு கடமையாற்றிய பொலிஸ் உப பரிசோதகர் நாகூர்தம்பி அபூபக்கர், அந்த முறைப்பாடை விசாரித்த நிலையில் சாராவின் குடும்பத்துடன் உறவு ஏற்படுத்தப்பட்டு அவர் அந்த குடும்பத்துடன் நெருங்கி பழகியுள்ளார்.

இந்நிலையிலேயே ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற நாளன்று, மாங்காட்டில் தலைமறைவாகி இருந்த சாராவை, அவர் காரில் ஏற்றி சென்றுள்ளார் என தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த நிரந்தர சாட்சி ஒன்றின் தகவலின் பிரகாரம் அவரை சி.ஐ.டி.யினர் கைது செய்து, தற்போது விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட தேசிய புலனாய்வு பிரிவின் தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் முதல் முதலாக சாரா தொடர்பாக அவரை தேடி, அவரது மட்டக்களப்பு மாங்காடு வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டு தேசிய புலனாய்வு தலைமையத்துக்கு அறிவித்துள்ளபோதும், அப்போது அவர்கள் அதில் கவனம் செலுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.