என்னிடமிருந்து பிள்ளைகளை பிரிக்காதீர்கள்- அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு பிரியா நடேஷ் உருக்கமான கோரிக்கை

நான் சுகயீனம் காரணமாக அடையும் வேதனையை காட்டிலும் பிள்ளைகளை பிரிந்திருப்பதனாலேயே பெரும் வேதனை அடைகின்றேன் என பிரியா நடேஷ் கவலை வெளியிட்டுள்ளார்.

எனவே அவர்களை என்னுடன் இருக்க அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று குடியேறிய குற்றச்சாட்டில் இலங்கையை சேர்ந்த பிரியா, நடேஷ் தம்பதியினரையும் குழந்தைகளையும் கிறிஸ்மஸ்தீவில் அந்நாட்டு அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது.

இவ்வாறு இரு பிள்ளைகள் கணவருடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிரியா, உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் பேர்த்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதாவது, கடந்த இரண்டு வாரங்களாக வயிற்றுவலி உட்பட உடல்நலக்குறைவுகள் குறித்து தொடர்ந்து முறைப்பாடு செய்து வந்த நிலையில், அவரை மாத்திரம் அதிகாரிகள் பேர்த்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

ஆனால்  அவரது கணவர் நடேஷ் முருகப்பனும் பிள்ளைகள் கோபிகாவும் தருணிகாவும் தொடர்ந்தும் கிறிஸ்மஸ்தீவிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பேர்த்  வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வரும் பிரியா நடேஷ், “எனது உடல்நிலை காரணமாக நான் கடும் வேதனையில் உள்ளேன் அதனை விட எனது பிள்ளைகளை பிரிந்திருப்பது இன்னமும் அதிக மனவேதனையை ஏற்படுத்துகின்றது.

அத்துடன் எனது ஐந்து வயது மற்றும் 3 வயது பிள்ளைகளுடன் தொலைபேசியில் உரையாடியபோது, அவர்கள் அழுதார்கள். அவர்கள் என்னை வருமாறு அழைக்கின்றனர் அல்லது இங்கு வருவதற்கு விரும்புகின்றனர்.

நான் சிகிச்சையை பெறும்போது அவர்கள் எனது அருகில் இருப்பதே எனக்கு ஆதரவு. ஆனால் தற்போது எனக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தினரையும் பறித்துவிட்டனர்.

நான் நெருக்கடியான நிலையில் உள்ளேன். ஆகவே அவர்களை, எனது அருகில் இருப்பதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.