13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை – விஞ்ஞாபனத்தில் சஜித் உறுதி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்தார்.

பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடும் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) கொழும்பிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே சஜித் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஆட்சியாளர்கள் மக்களின் பிரச்சினைகளை மனிதாபிமானமாக அணுகும் அதேவேளை, சட்டத்திற்கும் கொள்கைக்கும் அமைவாகவே நாடொன்றை நிர்வகிக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி அரச நிர்வாகத்திற்கு தூரநோக்கு சிந்தனையும் எதிர்காலத்தில் நிகழத்தக்க எதிர்பாராத சம்பவங்கள் தொடர்பான எதிர்வுகூறலும் ஆயத்தமும் காணப்பட வேண்டும்.

சுபீட்சமான எதிர்காலத்தை உருவாக்குவதை முன்நிறுத்தி கொள்கை ரீதியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். இவற்றையே நாம் செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

எமது விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளவாறு ஒருமித்த நாட்டிற்குள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.

அதில் 13 பிளஸ் அல்லது 13 மைனஸ் என்பவை இல்லை. ஒவ்வொருவருக்கு ஏற்றவாறு முரணான வகையில் செயற்படும் தன்மை எம்மிடமில்லை.

எனவே இவையனைத்தையும் கருத்திற்கொண்டு மக்கள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.